பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அகநானூறு - மணிமிடை பவளம்



உள்ளுறை: தாமரையின் இடையிலே இருந்த நீர் நண்டானது, இரைதேர் வெண்குருகிற்கு அச்சங்கொண்டு. ஒடித்தன் வளையினுள்ளே செறிவது போலப் பரத்தையர் உறவுடையவனாயிருந்த நீயும், அலர் கூறலுக்கு அஞ்சி, எம் வீடுநோக்கி வந்தனைபோலும் என்றனளாம்.

மேற்கோள்: 'புகன்ற உள்ளமொடு - ஈரத்து மருங்கினும்’ என்னும் துறைக்கு ‘அவனறிவாற்ற அறியும் ஆகலின் என்னுஞ் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினர்; எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி - நிற்காணிய சென்மே” என்பது, ‘தன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது’ என்று, ‘இளிவே இழவே’ என்னுஞ் சூத்திர உரையிலும், “பிறர் கூறும் பழிக்கு வந்தாய்’ என்றமையால், இஃது “உள்ளது உவர்த்தல் என்னும் மெய்ப்பாடு” என்று, ‘தெய்வம் அஞ்சல்' என்னும் சூத்திர உரையிலும் பேராசிரியர் காட்டினர்.

பாடபேதம்: 13. மனைநகு, மனைநடு.

177. விரைவிலே வந்துவிடுவார்!

பாடியவர்: செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்பு: சிறு குடிகிழான் பண்ணனின் போர் மறம்.

(தலைவன் பிரிந்து சென்று, வருவதாகக் குறித்த நாளிலே வராமலும் போய்விட, அதனால் மிகவும் வருந்தி வாடி நலிந்தனள் தலைவி. அவளுக்குத் தோழி, 'அவன் வருவான்’ என்று வலியுறுத்தியது இது)

        ‘தொன்னலம் சிதையச் சாஅய், அல்கலும்,
        இன்னும் வாரார்: இனி எவன் செய்கு? எனப்,
        பெரும்புலம் புறுதல் ஒம்புமதி-சிறுகண்
        இரும்பிடித் தடக்கை மான, நெய்அருந்து
        ஒருங்குபினித்து இயன்ற நெறிகொள் ஐம்பால் 5

        தேம்கமழ் வெறிமலர் பெய்ம்மார், காண்பின்
        கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக்
        கதிர்கதம் கற்ற ஏகல் நெறியிடைப்,
        பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக்,
        கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை 10

        அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்
        காடுஇறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,