பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 129


சென்று வேண்டும் தோழி, இப்படிக் கூறுகின்றாள். அல்லது, தலைவன் வரைதல் வேட்கையற்றுப் பிரிந்துறைதலால் ஊடிய தலைவியானவள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குத் தன் நிலைமையை இப்படி விளக்கிக் கூறுகிறாள்.)

        நகைநனி உடைத்தால்-தோழி! தகைமிக,
        கோதை ஆயமொடு குவவுமணல் ஏறி,
        வீததை கானல் வண்டல் அயர,
        கதழ்பளித் திண்தேர் கடைஇ வந்து,
        தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை 5

        அரும்புஅலைத்து இயற்றிய சுரும்புஆர் கண்ணி
        பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி,
        நல்வரல் இளமுலை நோக்கி, நெடிது நினைந்து,
        நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
        புலவுநாறு இருங்கழி துழைஇப் பலஉடன் 10

        புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத்
        தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப்
        படப்பை நின்ற முடத்தாட் புன்னைப்
        பொன்நேர் நுண்தாது நோக்கி,
        என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. 15

தகைமை மிகுந்த தலைமாலைகளைச் சூடியவரான தோழி மாருடன், திரண்ட மணல்மேட்டின்மீது யானும் ஏறினேன். மலர்கள் நிரம்பிய கானற்சோலையிலே வண்டலிழைத்து யாம் விளையாடியிருந்தோம். அவ்விடத்தே, விரைவாகச் செல்லும் குதிரைகளைக் கொண்ட வலியதேரினைச் செலுத்தியவனாக ஒருவன் வந்தான். குளிர்ச்சியான குளத்திலே நிறைந்திருக்கிற ஒள்ளிய பூக்களையுடைய குவளையின் அரும்புகளை விரித்துக் கட்டிய, வண்டு மொய்க்கின்ற கண்ணியினை, எனது பின்னலைக் கொண்ட முதுகுப்புறத்திலே தாழ்ந்து தொங்கும்படியாக யான் வேண்டாமலேயே வீணே சூட்டினான். நல்ல வளர்ச்சியினை நெடுக நினைந்தவனாக நின்றான். பின், அவ்விடத்தே மேலும் நில்லாமற் சென்றும் விட்டான்.

அந்த அளவிற்கே, இந்த ஆரவாரம் மிகுந்த ஊரானது, புலால் நாற்றமுடைய பெரிய கழியினைத் துழாவியவாறே, பலவகையான நீர்ப் பறவைகளும் தங்கிக்கொண்டிருக்கும் முட்களையுடைய நெடுந்தோடுகளைக்கொண்ட தாழையினைச் சார்ந்து, புலிநகக் கொன்றையுடன் பொருந்தித், தோட்டத்தில் நிற்கும் வளைந்த அடிமரத்தினையும் பார்த்து, என்னையும் பார்த்துக்கொண்டிருக்குமே!