பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அகநானூறு - மணிமிடை பவளம்


        ‘குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
        திதலை அல்குல் அவ்வரி வாடவும்,
        அத்தம்ஆர் அழுவம் நத்துறந்து அருளார்
        சென்றுசேண் இடையர் ஆயினும், நன்றும்
        நீடலர், என்றி-தோழி!-பாடுஆன்று 5

        பனித்துறைப் பெருங்கடல் இறந்து, நீர் பருகி,
        குவவுத்திரை அரந்த கொள்ளைய குடக்குஏர்பு,
        வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
        இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
        காலை வந்தன்றால் காரே-மாலைக் 10

        குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
        வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்
        கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற,
        பனிஅலைக் கலங்கிய நெஞ்சமொடு
        வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? 15

தோழி! குவளை மலரினைப்போல விளங்கும் மைதீற்றிய கண்கள் கலங்கவும், திருந்திய அணியினையும் தேமலையும் உடைய அல்குலின் அழகிய ரேகைகள் வாடி மறையவும், நமக்கு அருளாதவராக நம்மைத் தனித்து வாடவிட்டுப் பிரிந்து, அருநெறிகளையுடைய பரந்த பாலையினைக் கடந்து சென்றார் நம் தலைவர். அவ்ர் மிகவும் தொலைவிடத்தே உள்ளவராயினும், மிகவும் காலந் தாழ்க்காது வந்துவிடுவர் என்கின்றனை

பெருங்கூட்டமான மேகங்கள், வளைந்த அலைகளையும் குளிர்ச்சியான துறையினையும் உடைய பெரிய கடல்களிலே சென்று, நீரினைப் பருகி, அருந்திய கொள்ளையினையுடையவாக, மேற்றிசையிலே எழுந்து, சூலுற்ற பெண்யானைகளின் கூட்டத்தைப்போல இடந்தோறும் இடந்தோறும் தோன்றி, ஒலி மிகுந்தனவாக, ஒருங்கே உடன் சேர்ந்து பெய்தற்குத் திரண்டிருக்கும் கார்காலமும் வந்துவிட்டது.

மாலைப் பொழுதிலே, குளிர்ச்சிகொண்ட பிடவினது கூர்மையான அரும்புகள் அலர்தற்கு உரியதனை, வண்டினம் வாயினைத் திறத்தலால் எழுகின்ற அமையாத நறுமணத்தினைக், கூதிர் முன்பனிக் காலங்களுக்கு உரிய வாடைக்காற்றானது எங்கும் பரப்பப், பனி அலைத்தலால் கலங்கிய நெஞ்சத்துடனே, பிரிந்து சென்றவராகிய தலைவரின் பொருட்டு, நாமும் வருந்துவோம் அல்லமோ?