பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

அகநானூறு - மணிமிடை பவளம்


கயிற்றைப்பற்றி இழுத்துக் கொண்டிருப்பவரும் அவர்கள். அத்தகைய நிர்நிலையிலே, தாமரை தழைத்து அதன் அகன்ற இலைகளை நீருக்குமேலாக உயர்த்த தண்டுகளுடன் விளங்கும். பெரிய குளமும் அலையுமாறு காற்று மோதும்போது, பெரிய களிற்றியானை தன் காதுகளை அசைத்துக் கொண்டிருப்பது போல, அந்தத் தாமரை இலைகள் தாமும் அசைந்து கொண்டிருக்கும். அத்தகைய ஊருக்கு உரியவனாகிய தலைவனால் ஊரிலே எழுந்துள்ள அலரோ பெரிதாயிருக்கிறது. ஆனால்,

எமக்கும் அவனுக்கும் இடையேயுள்ள தொடர்போ, செழித்த வேழக்கோலாகிய புணையே எமக்குத் துணையாக அன்றொருநாள் புனல் விளையாடல் ஆடிய நட்பு மாத்திரமேயாகும்.

ஒளியுடைய தொடியணிந்த மகளிர்கள் பழைமையான யாழினை இசைத்துப் பாடவும், மிகவும் தண்மைவாய்ந்த முழவிலே குறுந்தடியினால் அடித்து ஒலிமுழக்கவும், குளிர்ந்த நறுமணம் உடைய சந்தனம் மணக்கும் அவர்களின் தோள்களைத் தழுவியவனாக, இந்நேரம் வரையிலும் பிறிதோர் இடத்திலேயே இருக்கின்றான் அவன்.

அங்ஙனமாகவும், அவனுடைய மனைவியானவள், எம்முடன் மனவெறுப்புக் கொள்ளுகின்றாள் என்று சொல்லுகின்றனர்.

வெற்றிச் சிறப்புடைய வேலினைக் கொண்டவன்; மழைத்துளிகள்போல அம்புகளைச் சொரிபவன், மழைமேகம் போன்ற கரிய கேடகத்தினை உடையவன்; பழையன் என்பவன். அவனுக்குரிய காவிரிக்கரை நாட்டிலேயுள்ள ‘போஒர் என்னும் ஊரினைப்போன்ற, செறிந்த என்னுடைய கைவளைகளை உரிமை கொண்டவனாக, அவள் வந்து உடையச் செய்தானும் அல்லன்.

எனவே, யாம் அவன் மனைவிக்குப் பகையுடையேம் அல்லேம். தன்னைச் சேர்ந்த மகளிரது அழகிய நெற்றி பசலைபடருமாறு அவரைக் கைவிட்டுப் பிரிந்துபோகும் அவளுடைய கணவனே, அவளுடன் கூடிப் பிரியாதிருக்கும் பகையாவதற்குப் பொருத்தமுடையவன் ஆவன்.

என்று, தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப இல்லிடைப் பரத்தை சொன்னாள் என்க.