பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 145



தோழி! நம் காதலர், நம் தோள்களின் துன்பம் நீங்குமாறு நம்முடன் உறங்கிப் பலநாள் கடந்துபோயின. களவுப் புணர்ச்சியையும், வினையின்றி இருப்பதற்கு நாணங் கொண்டமையினாலே கைவிட்டனர். தொலைவான நாட்டிலுள்ள அரிய பொருள்களை ஈட்டிக் கொணர்வதற்குத் துணிந்த உள்ளம் உடையவருமாயினர்.

வீட்டிலே வாழும் சேவற்கோழியினது தாடி தொங்கிக் கொண்டிருப்பதுபோல விளங்கும், பிளவுண்ட ஒளியுடைய தளிரினையும், கரிய அடிமரத்தினையும் உடையது யா மரம். அவற்றைக் கொண்ட வேனல் விளங்கும் மலைப்பகுதியிலேயுள்ள காடும் காய்ந்துபோயிற்று. அதனால், அதன் முனைப் பகுதியிலேயிருந்த ஊர்மக்களும் ஊருடன் எழுந்து வெளி நாட்டிற்கு ஓடிவிட்டனர்.அதனால் கெட்டழிந்துபோய்க் கிடந்த அரிய இடத்தே பனங்குருத்தை ஒடித்துத் தின்னும் பசுமையான கண்களையுடைய யானையானது, ஒளியுடைய ஞாயிறானது முதிராது இளவெயில் விளங்கும் காலைவேளையிலே, செயலொடுங்கி அசைந்தசைந்து கிடந்து உறங்கிக் கொண்டிருக்கும். அப்படி அசைந்து உறங்கும் யானையானது, வாள் போலும் வாயினையுடைய சுறாமீன்கள் உள்ள அச்ச முடைய துறைகளைக் கடந்து, நாள்வேட்டை ஆடி வருவதற்காகப் புறப்பட்ட நயமில்லாத புரதவர்களுடைய, கடலிலே விளங்கும் தோணியினைப் போலவும் தோன்றும். மேகம் வந்து படியும் பெரிய மலையானது குறுக்கிட்டுக் கிடக்கும் அத்தகைய பாலைவழியிலே,

மிகவுயரமாக வளர்ந்து, காய்ந்த உச்சியினையுடையதாகக் காணப்படும் ஞெமை மரங்களையுடைய, ஆள்வாடை இல்லாத இடங்களிலே, மலையைச் சார்ந்திருந்த சிலவான குடிகளையே உடைய குடியிருப்பிலே, இரவில் விருந்துண்ணப் பாதுகாப்புடன் தங்கித்தங்கித் தொடர்ந்து செல்பவர், நம்முடைய உயர்வையே கருதினர் கருதியே அங்ஙனம் செல்லத் துணிந் தனர்!

சினந்தெழுந்தோரது வெம்மையான போர்முனையை அழித்த, கடுஞ் செலவினையுடைய குதிரைகளையும், நீண்ட கழலால் பொலிவுற்ற கால்களையும், தறுகண்மையினையும் உடையவர் மழவர்கள். அவர்கள் கொண்டாடும் பூந்தொடை விழாவின் தலைநாளைப்போலக் கொணர்ந்து இட்ட மணல் பரந்துள்ள அழகிய நம் மனையின் முற்றம், அதனால் தனிமையுற்றுத் தன் அழகு கெடுமோ?