பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 147


        பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
        இருண்டுஉயர் விசும்பின் வலன்ஏர்பு வளைஇப்,
        போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து
        அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர்
        அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் 5

        கழித்துஎறி வாளின், நளிப்பன. விளங்கும்
        மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
        கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென
        மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்,
        பொலிந்த ஆயமொடு காண்தக இயலித், 10

        தழலை வாங்கியும், தட்டை ஒப்பியும்.
        அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,
        குறமகள் காக்கும் ஏனல்
        புறமும் தருதியோ? வாழிய, மழையே!

பெரிய கடலிலே நீர் முகந்து கொண்டு பெருங் கூட்டமாக திரண்டு வருகின்ற மேகமே!

உயர்ந்த வானிலே வலமாக எழுந்த வளைத்துக்கொண்டு இருண்டிருக்கின்றாய். தோற்போர்வையுற்ற முரசினைப்போல இடிமுழக்குகின்றாய். முறையாக ஆட்சிபுரிந்து, அறநெறிகளி னின்றும் பிழையாது விளங்கும், போர்த்திறன் அறிந்த மன்னரது அரிய போர்க்களத்திலே, எதிர்த்துப் போரிடும் பேராண்மை மிக்க வீரர்கள், தம் உறையினின்றும் உருவிய வாளினைப் போன்று, செறிவுகொண்டதாக விளங்கும் மின்னலின் தொகுதியையும் உடைய ஆயினை. நீ நாளும் செய்யும் இந்த ஆரவாரம் எல்லாம் வீணுக்குத்தான் செய்கின்றாயோ?

பொன்போல அழகுடன் மலர்ந்த வேங்கைப் பூக்களாலாகிய செறிவுற்ற மாலையினைத் தரித்து, பொலிவுடன் விளங்கும் தன்னுடைய ஆயத்தாருடன், காண்பதற்கு இனிதான ஒயிலுடன் நடந்து, தழலினைச் சுற்றியும் தட்டையினை அடித்தும் தினை கவரவரும் பறவைகளைக் கடிந்து, தீக்கொழுந்துபோன்ற அசோகின் அழகிய தழையினாலான தழையுடையை உடுத்த, குறவர்மகளாகிய எம் தலைவி, காத்துக்கொண்டிருக்கும் தினைப்புனத்தின் பக்கமும் சென்று மழை பெய்வாயோ? நீ வாழ்க!

என்று, இரவில் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொன்னாள் என்க.