பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 149


        நாறுஉயிர் மடப்பிடி தழீஇ, வேறுநாட்டு
        விழவுப்படர் மள்ளரின் முழவெட்டுத்து உயரிக், 5

        களிறுஅதர்ப் படுத்த கல்லுயர் கவாஅன்
        வெவ்வரை அத்தம் சுட்டிப் பையென,
        வயல்அம் பிணையல் வார்ந்த கவாஅன்
        திதலை அல்குல் குறுமகள் அவனொடு
        சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் 10

        படர்மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
        மனைமருண்டு இருந்த என்னினும், நனைமகிழ்
        நன்ன ராளர் கூடுகொள் இன்னியம்
        தேர்ஊர் தெருவில் ததும்பும்
        ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு பொருளே. 15

முன்னர்ப் பசுமையான பழங்களைக் கொண்ட பலாமரங்களை உடையதாயிருந்த காடும் இப்போது வெம்பிக் கிடக்கும். மேகம் வானத்திலே தோன்றாது ஒழிதலால், வேனிலின் வெப்பமும் மிகுதியாயிருக்கும். குளங்கள் எல்லாம் நீரற்று வறண்டு போகும். கற்கள் நிறைந்த அத்தகைய வழியிடங்களிலே, பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் இளைய தம் பிடிகளைத் தழுவியவாறே, களிறுகள், தங்கள் முழவுகளை எடுத்து உயர்த்துக்கொண்டு, வேற்றுநாட்டு விழவினை நினைத்துச் செல்லும் மள்ளர்களைப்போல நெறிப்படுத்திச் சென்று கொண்டிருக்கும். மலைகள் உயர்ந்து விளங்கும் கொடிய பக்கமலையைச் சார்ந்த, இத்தகைய சுரத்தினைக் கடந்து செல்லத் துணிந்தனள் அவள்.

வயலைக் கொடியினாலாகிய அழகிய தழையுடை தாழ்ந்த துடைகளையுடையவள், தேமல் படர்ந்திருக்கும் அல்குல் தடத்தினை உடையவள்; எம் இளைய மகள், அவள், மெல்லென அவனோடு சென்றனள். எம்மை மறந்து பிறள் ஒருத்தியாகவும் ஆயினள். அவள் அப்படியாயின பொழுதிலே, எக்காலத்தும் பெருகி நிறையும் மனத்துயரோடு, திசையெல்லாம் தேடித் தேடி நொந்து வீட்டின்கண் மயங்கியவளாக இருப்பேன் யான். அப்படியிருந்த என்னைக் காட்டிலும், கள்ளுண்டு மகிழும் நல்ல இசைவாணர்களாகிய பாணர்கள் ஒன்றுகூடி ஒலிக்கும்இனிய வாத்தியங்கள், தேர்கள் ஒடும் பெருந்தெருவிலே இடையறாது ஒலிக்கும் இவ்வூரானது, தனக்கு விருப்பம் மிக்கதாயிருந்தவொரு ; சிறந்த பொருளினை இழந்ததாயிருக்கின்றதே!

என்று, மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னாள் என்க.