பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 151


        நிரைமணிப் புரவி விரைநட்ை தவிர,
        இழுமென் கானல் விழுமணல் அசைஇ, 15

        ஆய்ந்த பரியன் வந்து, இவண்
        மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!

வாழ்க அன்னையே! யான் சொல்வதையும் விரும்பிக் கேட்பாயாக:

ஒரு நாள், பொங்குதலுடன் வருகின்ற ஊதைக்காற்றோடு, அலைகளும் வந்த் கரையிலே மோதிக்கொண்டிருந்தன. உயர்ந்த உச்சியையுடைய கடற்கரைச் சோலையிலேயுள்ள, புன்னை மரத்தின் கிளையிலே வந்து தங்கியிருந்த, புதிய நாரை யொன்று அஞ்சிப் போகுமாறு, தலைவன் ஒருவன், கடலோரத் திலே தேரூர்ந்து வருவதற்கும் உரியவனானான்.

அதன்மேலும், பெரிய கழியினையுடைய ஆற்றின் புகுமிடத்தே, அவன் தேர் கடந்து வரும்போது, வலிய சுறாமீன் தம் உடம்பிற் பொருந்தத் தாக்கி எறிந்ததென்று, தேர்க் குதிரைகள் தளர்ந்தன. தேர்ப் பாகன் தேரின் செலவை நிறுத்தினான்.எழுச்சியும் பயனும் குன்றியனவும், பூட்டு அவிழ்ந்த நிலையினை உடையனவுமாக நிரைத்த மணிமாலைகள் பூண்ட குதிரைகளும், விரைந்து செல்லும் தம் நடை ஓய்ந்தவாய்த் தங்கின. ‘இழும் என்னும் ஒலியினையுடைய கானலிடத்தே, சிறந்த மணலிலே அத் தலைவன் வந்து தங்கினான். அவ்வளவேயன்றி, அவன் சிறந்த குதிரைகளையுடையவனாக இவ்விடத்தே வந்து, மயங்கிய மாலைவேளையிலே, தலைவியுடன் கூடிச் சேர்ந்திருந்தவன் அல்லன்.

அன்று அவ்வாறு வந்திருந்த அவனை, நின் மகள் சுழலும் தன் குளிர்ந்த கண்களால், விருப்பமுடன் பார்த்தவளுங்கூட அல்லள்! அங்ஙனமாகவும்,

அலைகளிலே நீந்தி விளையாடினமையால் தளர்ச்சியுற்ற, நிறைந்த வளையினையுடைய மகளிர் கூட்டத்தினை, உப்பு மேட்டிலே ஏறிநின்று, இருள்படரும் வேளையிலே, கரைநோக்கி வரும் படகுகளை எண்ணும் துறைவனான அவனோடும் சார்த்தி, இந்த ஊரானது, ஒப்பற்ற தன் கொடுமைக் குணத்தின் காரணமாக, அலர்கூறித் தூற்றும். அதனை மெய்யெனக் கொண்டு, அவளை நீயும் வருத்தாதிருப்பாயாக.

என்று, தோழி செவிலித்தாய்க்கு எடுத்துக்கூறி அறத்தொடு நின்றனள் என்க.