பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

அகநானூறு - மணிமிடை பவளம்


வாய்த்தலும் இல்லை என்றாள். இரவில் மறுகு அரவு உமிழ் மணியால் விளக்குறும் என்றதால், இரவுக்குறி இடையீடு உணர்த்தி அதுவும் அரிது என்றனள். அதனால், தலைவியின் ஆற்றாமை கூறினாள்,நெற்றி பொன்னிறங் கொண்டது என்றாள். ஆகவே விரைவில் அவன் வந்து மணத்தலே செய்யத்தக்கது என்பது குறிப்பு.

பாடபேதங்கள்: பாடியவர்: வெங்கண்ணன். 1. மதியிருப் பன்ன, 6. பின்புறப். 8 இறங்கு குரல் இறுத்தன, இறங்கு பொறை இறுத்தன. 10. வியலகம் துழைஇ -

193. கைவிடல் ஆற்றேன்!

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: பாலை. துறை: பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவு அழுங்கியது.

(பொருளார்வத்தால் வேற்றுநாடு செல்ல எண்ணிய தன் நெஞ்சிற்குத் தலைவன் ஒருவன், இவ்வாறு கூறியவனாகத் தான் போகும் எண்ணத்தையே கைவிட்டு விடுகிறான்)

        கானுயர் மருங்கில் கவலை அல்லது,
        வானம் வேண்டா வில்லேர் உழவர்
        பெருநாள் வேட்டம், கிளைனழ வாய்த்த
        பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப்,
        பொறித்த போலும் வால்நிற எருத்தின், 5

        அணிந்த போலும் செஞ்செவி, எருவை,
        குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
        அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
        விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்தடி
        கொல்பசி முதுநரி வல்சி ஆகும் 10

        சுரன்நமக்கு எளிய மன்னே; நல்மனைப்
        பன்மாண் தங்கிய சாயல், இன்மொழி,
        முருந்தேர் முறுவல், இளையோள்
        பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே.

நெஞ்சமே வில்லாகிய தம்முடைய ஏரினாலே, கொள்ளையிடலாகிய உழவைசெய்து வாழ்பவர் ஆறலைப்போர். அவர் காட்டிடத்தே உயரமான பகுதிகளிலேயுள்ள கவர்த்த வழிகளை அல்லாமல், மழை வளத்தினை ஒருபோதும் வேண்டுவதில்லை. அவர், தம் இனத்துடனும் எழுச்சிகொள்ள வாய்த்த பெரிய நாள்வேட்டையிலே, போர்க்களத்திலே செத்து வீழ்ந்தவர்களுடைய குருதியை உண்டாமையால், எருவைச் சேவல் சிவந்த வாயுடையதாயிற்று. பொறித்து வைத்தாற்போலும் புள்ளிக-