பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 157


ளோடு கூடிய வெண்ணிறம் கொண்டது அதன் கழுத்து. அதன் சிவந்த காதுகள், ஆபரணமாகச் செய்து சூட்டியது போல அழகுடன் விளங்கும். குட்டையான மலையிலே, நெடிய வளர்ந்த அடிமரத்தினையுடைய மாமரத்தின், அரிய கவட்டினின்றும் எழுந்த உயர்ந்த கிளையிலேயுள்ள, தன் குஞ்சினை உண்பிக்க அது விரைந்து முயலும்போது, அக்குஞ்சின் வாயினின்றும் வழுக்கி வீழ்ந்த கொழுத்த கண்ணின் ஊன் துண்டு, பழைய பசியினை உடைய கிழட்டு நரிக்கு உணவாகும். அத்தகைய கொடிய காடும் கடந்து செல்வதற்கு நம்மளவில் எளியதே. ஆயினும்,

நமது நல்ல வீட்டிலேயுள்ள, பலவகையான மாண்புகளையும், நிலைபெற்ற சாயலினையும், இனிய பேச்சினையும், மயிலிறகுக் குருத்தினைப் போன்ற பல்வரிசையினையும் உடைய இளமைப் பருவத்தினளாகிய நம் தலைவியின், பெருத்த தோள்களைத் தழுவிப் பெறும் இனிய துயிலினை, யான் கைவிடுவதற்கு ஆற்றாதே இருக்கின்றேனே!

என்று, பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவழுங்கினான் என்க.

சொற்பொருள்: கான் உயர் மருங்கு காட்டிடத்தேயுள்ள மேட்டுப் பகுதிகள். கவலை - கவறுபட்ட வழி 2. வானம் மழை. 3. பெருநாள் வேட்டம் - பெரிதான நாள்வேட்டம். 5. வானிறம் - வெண்மை நிறம். எருத்து கழுத்து. 6. குறும் பொறை - குட்டையான மலை. 9. வாய் வழுக்கிய குஞ்சுகளின் வாயினின்றும் வழுக்கிய, 19. தொல் பசி - பழம்பசி, பலநாள் உணவற்றதால் வருவது. வல்சி உணவு.

விளக்கம்: ஆறலை கள்வர், வழிவருவாரைக் கொள்ளையிட்டே வாழ்பவராதலின் மழைவளம் வேண்டாராயினர். எருவை, தன் குஞ்சுக்கு இறந்தவர்களின் கண்ணினைக் கொண்டு கொடுக்கும் என்பர். தரன் இடம்விட்டு நகர்ந்து செல்லமாட்டாது எருவைக் குஞ்சின் வாயினின்றும் வழுக்கிவிழும் ஊனைத்தின்று உயிர்வாழும் முதுநரிபோலத், தானும் பொருள்தேட இயலாதவன் அன்று காதலியைப் பிரிய மனமில்லாதது பற்றியே செல்லத் துணிந்திலேன் என்றான். வழி யேதத்திற்கும் அஞ்சாது, ‘எளிய’ என்னும் அவன், தன் காதலியைப் பிரிய ஆற்றாத உள்ளம் உடையவனாயிருத்தல் வாழ்வியலின் சிறந்த பண்பைப் புலப்படுத்தும்.

பாடபேதம்: 19, கொல்பசி முது நரி,