பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 161


எங்கும் மாலைகளைத் தொங்க விட்டும், கோலஞ்செய்து, ‘அவர்கள் மகிழ்வுடன் வந்து இனிமை நுகர்வார்கள் என்றுஞ் சொல்லியிருப்பாள்.

யானும், மானின் பிணைபோன்ற பார்வையினையும் மடப்பத்தினையுமுடைய நல்லாளான அவளைப் பெற்றவள் ஆவேன். பெற்றவள் என்ற அந்த் உரிமைக்காக, அவன் அருள் செய்யாமற் போனாலும், இனிய நகைதவழும் பல் வரிசையினை உடைய அவளைப் பலநாள் கூந்தலை வாரி முடித்தும், இடுப்பிலே தூக்கிச் சுமந்தும், நன்மை பொருந்திய புனைவுகள் பலவற்றைப்புனைந்து உதவியும் வந்த தொடர்பும் யான் பெரிதும் உடையவள் ஆவேன். அதனையேனும் அவன் அறிந்தன னென்றால் நன்றாயிருக்குமே!

ஆடை சூழ்ந்திருக்கும் ஒப்பற்ற பெரிய குடுமியினையும்,சிறிய பையினைத் தொங்கிவிடப்பெற்ற பல தலைகளையுடைய வளைந்த கோலினையும், இனிமேல் நிகழ்வதனை அறியும் வல்ல மையினையுமுடைய, அறிவிற்சிறந்த வேலனே!

இரவிலேயும் அமையாது துயரமுற்றுக் கொண்டிருக்கும் எம்முடைய, இடையறாது வரும் நீருடன் விளங்கும் கலங்கிய கண்கள் இனிதாகத் துயிலும் பொருட்டாக, அவன், அவளை எம்முடைய மனையினிடத்தே முற்படக் கொண்டுவந்து தருவானோ? அல்லது, தன்னுடைய மனைக்கே முதலில் கொண்டு செல்வானோ? அந்தத் தலைமகனின் குறிப்புத்தான் யாதோ? கழங்கின் திண்மையை அறிந்து எம்க்குக் கூறுவாயாக

என்று, மகட்போக்கிய நற்றாய் வெறியாடும் வேலனுக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. இறந்த கடந்த குறுமகள் - இளையவளான மகள். 2. திருந்துவேல் - திருத்தமான வேல்; தீட்டிய கூர்மையுடைய வேலை. விடளை- காளை தலைவனைக் குறித்தது,3.இஞ்சி-சுற்றுப்புறச்சுவர். பூவல்-செம்மண்.4, மணல் அடுத்து - மணல் நிரப்பி. நாற்றி - தொங்கவிட்டு. 7 நட்பிற்கு - தொடர்பிற்கு 9, நுசுப்பிவர்ந்து இடையிலே ஏற்றிச்சுமந்து. 12. அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி - தலையிலே குடுமியைச்சுற்றித் துணி கட்டியிருக்கும் கோலம். முதுவாய் அறிவு முதிர்ச்சியுடைய 15. கழங்கின் திட்பம் - சோழிகளை வைத்து இன்று குறிசொல்பவர் போல, அந்நாளிலே கழங்கினை வைத்துக் கொண்டு குறிகண்டு கூறினர்; அந்த உறுதி. 17. படீஇயர் - கண் துயிலும் பொருட்டு.