பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அகநானூறு - மணிமிடை பவளம்



நிறைந்த சூல்கொண்டமடப்பத்தையுடையதன் பிடியினைத் தழுவிக் கிடந்த, வெண்மையான கொம்புகளையுடைய, தன்னினத்திலேயே சிறந்து விளங்கிய களிறானது, தன் கன்று தன்மீது ஏறி இறங்கி விளையாடப் படுத்துக் கொண்டிருக்கும்

நடுக்கத்தைத் தருவதான அத்தகைய சுரநெறியைக் கடந்து, ஒள்ளிய பூங்கொத்துக்களையுடைய கொன்றை மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கும், மலைகளைச் சார்ந்த நெறியிலே, தம் பொருளிட்டலாகிய செயலை வலிபெறுத்தும் நெஞ்சத்துடன், நின்னுடைய நிரைத்த வளைகள் நெகிழுமாறு, இங்ஙனம் அருள் அற்றவராகிப் பிரிந்த சென்றவர் நம் தலைவர்.

போரிடலை விரும்பிப் போர்முனைக்கு எழுவதற்கு நினைப்பவரையும், அச்சத்தால் ஓடச்செய்த, வலிமிகுந்த வீரச்செல்வத்தினை உடையவனும், வீரமிகுந்த படையினை உடையவனுமான கண்ணன் எழினி என்பவனது, தேன்மிகுந்த முதுகுன்றம் என்ற மலைப்பகுதியைக் கடந்து சென்றனராயினும், அவர் இனியும் காலம் நீட்டித்திருப்பவரல்லர் விரைவிலே வந்து விடுவர்.

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தலைமகளின் சிறந்த பண்பைக் கூறித் தெளிவித்தனள் தோழி என்க.

சொற்பொருள்: 1. மாமலர் - கரிய மலர்; நீலோற்பலம்; மாமலர்-பெரிய மலராயின் தாமரை மலர் என்க. மலர் வண்ணம் - மலரின் தன்மை. 2. பூநெகிழ் அணை - அழகு குலைந்து போன தலையணை; தொய்ந்துபோன தலையணை என்க. சாஅய் வாடிய 3. நன்னர் மக்கள் - ஆய மகளிர்கள். 5. இனையல் - வருந்தாதே முனை - போர் முனை, 6. முரண் - போர்ச் செருக்கு திரு செல்வம்; வெற்றித் திரு. 8. தேமுது குன்றம் - இனிய முதுகுன்றமும் ஆம்; முதுகுன்றம், விருத்தாசலம் என இந்நாள் வழங்கும். இறந்தனர் - கடந்தனர். 9, யாழ - அசை நிரை வளை - நிரைத்த வளையல்கள்; அவை நெகிழ்தல் மேனியின் மெலிவினால், 10. குவையிரும் கூந்தல் - அடர்ந்த பெரிய கூந்தல், 1. மடவோள்-மடப்பத்தையுடைய இளையவள்.விறல் ஆற்றல்; மேம்பாடு.13. கடுஞ்சூல் - நிறை சூல்.15. பனிச்சுரம் - நடுக்கந்தரும் சுரநெறி. நீந்தி - கடந்து. 17. வினை வலியுறுஉம் - செயலிலே வலிமை கொண்ட தான; ஊழ்வினை வந்து வலியுறுத்தும் எனலும்ஆம்.

உள்ளுறை: நிறைசூலுற்ற மடப்பிடியைத் தழுவிக் கிடக்கும் களிற்றின்மீது அதன் கன்று ஏறி இறங்கி விளையாடுவதையும், அது தலைவியைத் தழுவிக் கிடக்கும் தலைவனின் மார்பிலே