பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 171



வாடிப்போன மாலையாகிய கள்ளியைக் கவ்விக் கொண்டிருந்த, செயலற்று வாடியிருந்த மான் கூட்டத்திலே, அரத்தால் அராவப்பட ஊசியினது திரண்ட முனையைப் போன்ற உறுதி பொருந்திய பற்களையுடைய செந்நாய் தாக்கும். அது தாக்குதலினால், காற்றின் முன்னே பறந்தோடும் பூளைப் பூவினைப் போல, ஒய்யென்ற அலறலுடன் மானினம் எல்லாம் தம்நிலை கெட்டு ஓடும். அப்படி ஓடிப்போன தன் இனமாகிய கூட்டத்தை ஒன்று சேர்ப்பதற்காகக், கலைமா னானது, ஞாயிறு மறையும் மாலைப் பொழுதிலே, தன்னுடைய ஆண்மையான குரல் தோன்றுமாறு கூப்பிட்டுக் கொண்டிருக்கும்.

அத்தகைய, கடல்போலப் பரந்து கிடக்கும் காடும் பிற்பட்டுப் போகுமாறு, அதனைக் கடந்துபோக எண்ணுவை. ‘பிறரைப்போல யாமும் செல்வோம் ஆனால், எமது போக்கும் நன்றாகவே விளங்கும் என்று கருதும் பொருளாசை கொண்ட உள்ளமானது, கொஞ்சமும் தளர்வில்லாமல் செலுத்தச் செல்வதற்கு உரியையும் ஆகுவை!

மேம்பாடுடைய வெற்றியை ஈட்டித்தந்த, வாய்த்த வெற்றி வாளினை உடையவன் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல். அவன், மேலைத் திசையிலே உள்ளதாகிய பெரிய பொன்னினை யுடைய வாகை மரம் நிற்கும் பெருந்துறை என்னும் இடத்திலே நிகழ்ந்த போரிலே, பொற்பூண் அணிந்த நன்னன் என்பவனைப் போக்களத்திலேயே மடிந்து ஒழியச் செய்தான். முன்பு சேரநாட்டார் இழந்த நாட்டை மீட்டுத் தந்தான். அவன் அன்று பெற்றதைப் ப்ோன்ற பெரிதான செல்வத்தையே பெறுவதாக இருந்தாலும்,

மூங்கிலைப் போல வளைந்தனவாக ஒத்திருக்கும், தண்மையான திரண்ட பூரித்த தோள்களை உடையவள் என் தலைவி. அவள் இவ்விடத்தே தனித்திருந்து வாடி உயிர் துறக்குமாறு அவளைப் பிரிந்து, யானோ நின்னுடன் வருவேன் அல்லேன்.

என்று, பொருள் கடைக்கூட்டிய தன் நெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவழுங்கினான் என்க.

சொற்பொருள்: 2. நிரை கால் - நிரை. நிரையாக வருகின்ற காற்று. ஒற்றலின்-மோதுதலினால், 3. பெயல் - மழை.4. உயங்கல் யானை வருத்தங் கொண்ட யானை, நசை வேட்கை அலமரல் -சுழன்று வருந்தல். 5.சிலம்பிவலந்த-சிலம்பி வலைபின்னியிருந்த வறுஞ்சினை - தழையற்று வறிதாகிப் போன கிளைகள். 6. உலவை -மரச் செறிவு. அரிநிழல் - அரியரியாகத் தோன்றும்