பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 173




நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்,
புலால்அம் சேரிப், புல்வேய் குரம்பை,
ஊர்என உணராச் சிறுமையொடு, நீர்உடுத்து,
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம் .
ஒருநாள் உறைந்திசி னோர்க்கும், வரிநாள், 5

தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி
வந்தனை சென்மோ -வளைமேய் பரப்ப!
பொம்மற் படுதிரை கம்மென உடைதரும்
மரன்ஓங்கு ஒருசிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல்உற, 10

நல்தேர் பூட்டலும் உரியீர், அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம்வரை அளவையின் பெட்குவம்,
நும் ஒழ்பதுவோ? உரைத்திசின் எமக்கே,

சங்கினங்கள் மேய்ந்து கொண்டிருக்கின்ற கடற்பரப்பினுக்கு உரியவனான தலைவனே!

நிலாவினைப்போல வெண்மையுடன் விளங்கும் மணல் மிகுந்த தெருக்களை உடையது எம் ஊர். அத்தெருக்களிலே, புலால் வேயப்பெற்ற குடிசைகளை உடையதாயிருக்கும் புலால் நாற்றமுடைய சேரியே அது. ஓர் ஊர் என்று உணர்வதற்கும் ஆகாத சிறுமையுடனே, நீர் சூழப்பெற்றதாகத் துன்பமிகுந்த உறையுளை உடையதும் அது. ஆனாலும் அதன் கண் பெறும் இன்பமோ, ஒரு நாள் தங்கியிருந்தவர்க்கும் பிற்றைநாள் தம்முடைய ஊரினையே மறக்கச் செய்யும் பண்பினை உடையதாகும். அதனால், எம் ஊருக்கு நீயும் வந்து போவாயாக,

பொலிவுற்று ஒலிக்கும் அலைகள் விரைந்து உடைந்து சிதறுகின்ற, மரன் ஓங்கியிருக்கின்ற ஒரு பக்கத்திலே, பலப்பல வகையும் பாராட்டியவனாகப், பகல் வேளையெல்லாம் எம் முடனே கழிப்பாயாக. இரவு உறுங்காலத்தே, நின்னது நல்ல தேரினைப் பூட்டிச் செல்வதற்கும் உரியையாகுக.

அங்ஙனமன்றி, இரவிலும் எம் ஊரிலேயே தங்கிச் செல்வாயானால், யாமும், எம் வரையிலும் இயன்ற அளவுக்கு நின்னைப் பேணுவோம். நின்னுடைய மனத்திற்கு ஒப்பது எதுவோ? அதனை எமக்கும் உரைப்பாயாக.

என்று. தலைமகள் குறிப்பறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறினாள் என்க.