பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 181



உலகம் முழுவதற்குமாக ஒருங்கே நிழல்செய்து கொண்டிருக்கும் கெடாத வெண்கொற்றக் குடையினை உடையவன்; கடல் போன்ற தானைப்பெருக்கத்தையும், செருக்குடைய குதிரைப் படையினையும் உடையவன், பாண்டியன், போரிலே வெற்றியுடன் அமரினைச் செய்து முடித்து, அந்த மகிழ்வினாலே களித்திருப்பது அவனுடைய அகன்ற பெரிய பாசறை. அதனிடத்தே சென்று விடைபெறுவதான செயலையும் நாம் முடித்துவிட்டோம். அதனால்,

கார்மழை பெய்ததனால் எதிர்ப்பட்டுக் காட்சிக்கு இனி தாகக் காடும் விளங்கும்; தொகுதி கொண்டுவரும் வண்டினங் களின் அழகிய சிறகினையுடைய கூட்டங்கள், மணம் கமழுகின்ற முல்லை மலர்களிலே, மாலைப் பொழுதிலே, மொய்த்து ஆரவாரித்துக் கொண்டுமிருக்கும். நாம் திரும்புவதற்கான பொழுது வந்துவிட்டதனை அதோ நீயும் பாராய்! அதனால்,

வெண்மையான நெல்லினை அரிவோர் முழக்கும், தோல் மடங்கிய ஓரங்களையுடைய தண்ணுமையின் ஒலியானது, பல்வகை மலர்களையுடைய பொய்கையிலே தங்கியிருக்கும் பறவைகளை எல்லாம் ஓட்டும், விளைந்த நெற்பயிர் செறிந்த வயல்களையுடையது வாணனது சிறுகுடி என்னும் ஊர். அவ்வூரிலுள்ள குளிர்ந்த சோலையினைப்போல மணக்கும் கூந்தலையும், ஒளிபொருந்திய வளையல்களையும் உடைய எம் தலைவியின் தோள்களை, யாம் சென்று தழுவுதலைப் பெறுவதற்கு, இன்றே, பாகனே, நின்னுடைய நல்ல தொழில்திறம் உடைய நெடுந்தேர் மிகவும் விரையச் செல்வதாக!

என்று, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குத் தேரை விரையச் செலுத்துமாறு கூறினான் என்க.

சொற்பொருள்: 1. தொலையா - கெடாத, 2. தானை - காலாட்படை. கலிமா - செருக்குடைய குதிரைப் படை. 4. வினைமுடித்தனம் - பாண்டியனிடம் விடைபெற்று வருதலான வினையை முடித்துவிட்டோம்.5. எதிரிய-எதிரிட்டுத் தோன்றிய. புறவு - காடு. 6. கணங்கொள் - தொகுதி கொள்ளும் 10. மடிவாய் - மடிந்த வாய்: தண்ணுமையின் தோல் மடிந்திருப்பதனால் சொல்லப்பட்டது. 12. வாணன் - ஒரு குறுநிலத் தலைவன்; பண்ணன் என்பது வேறு பாடம்.

உள்ளுறை: முல்லை மலரிலே வண்டினம் மாலைக் காலத்திலே மொய்க்கச் சென்றதைக் கூறினான். கார்காலம்