பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 183



        கல்பிறங்கு ஆரிடை விலங்கிய
        சொல்பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே

உயிர்கள் ஒன்று கலந்து இணைந்த, பழைமையாக வரும் தொடர்ந்த நட்பினாலே, குற்றமற்ற காதல் நெஞ்சத்துடனே, நம்மோடு இணைந்திருந்தவர் போலப், பெண்ணே! நின்னிடத்தே இருந்து யாம் என்றும் பிரியோம் என்று, பொய் மையிலே வல்லமையுடைய தன் உள்ளத்துடனே யாம் விரும்புமாறு கூறி, அன்று எம்மைத் தலையளி செய்தவரும் அவரே இனி, அந்த உறுதியானது இல்லாமற்போன கொள்கை யினராகிப், பிரிவுத் துன்பமானது அதிகமாகிய வருத்தத்துடன் நம்நெற்றியிலே பசலை படரவும், நாம் அழவுமாக, நம்மைப் பிரிந்து சென்றனர். என்றாலும்,

மழைபோலப் பணி பெய்துகொண்டிருக்கும் முன்பனிக் காலத்தின் மயங்கிய இருளும் நீங்கியது; நீண்ட மூங்கில்கள் உயரமாக வளர்ந்துள்ள நிழல்பொருந்திய மலைச்சாரலிலே, மதயானையின் கன்னத்தின் பக்கத்தைப்போல விருப்பமூட்டும் மலையுச்சிகளிலே இருந்து, நீரும் ஊர்ந்து இறங்கிக் கொண்டிருக்கிறது. அவ்விட்த்தே, புலியினின்றும் உரித்த வரிகளையுடைய தோலைப் போன்று விளங்கும், மணநாளிலே பூக்கும் வேங்கையின் நறுமணமுடைய மலர்கள் உதிருமாறு, செருக்கு மிகுந்த, அந்த வேங்கையினது மேனோக்கி உயர்ந்து எழுந்த பெரிய கிளையிலே, கூட்டமான ஆண்குரங்குகள் ஏறித், தம்முடைய பெண் குரங்குகளைக் கூப்பிட்டுத் தாவிக்கொண்டு மிருக்கும். அத்தகைய, குன்றிடையேயுள்ள ஒடுங்கிய நெறியாகிய, கற்கள் விளங்கும்அரிய இடங்கள் குறுக்கிட்ட அதனையும் கடந்து, மொழிவேறுபட்ட தேயங்களுக்கும் சென்றவர் அவர்.

சொன்ன சொல்லிலே நிலைபெற்ற உறுதியுடைய, நெடுந்தொலைவுக்கு விளங்கும் புகழையும் உடைய, வளமிக்க கோசர்களது விளக்கமுற்ற படைகளை அழித்து, அவர்களுடைய நாட்டையும் கைக்கொள்ள விரும்பியவன், பொலம் பூண்கிள்ளி’ என்பவன். அவனுடைய, நெய்தற் பூக்கள் விரிந்து மணம் பரப்பும் நீண்ட கழியின் நடுவே, தோட்டக் கால்களையுடைய பெரும் புகழ்பெற்ற காவிரிப்பூம் பட்டினத்தைப் போன்ற செழுமையான நம் வீட்டிலே, நல்ல விருந்து செய்வதற்கு இனபம் உண்டாகுமாறு, சிறந்த பொருள்களை அவர்சென்ற விடத்திலே எளிதாக அடைவாராக! என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொன்னாள் என்க.