பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 5


அவ்விளைஞர் துஞ்சினாலும், கூரிய எயிற்றினையும் வலஞ்சுரிந்த வாலினையுமுடைய நாய் குறையா நிற்கும். அரவமிகுந்த வாயையுடைய அந்நாய் குறையாது உறங்கினாலும், பகலுரு வினை ஒக்கும் நிலாவைக் கக்கியபடி விசும்பின் அகன்ற விடத்திலுள்ள சந்திரன் நிலைபெற்று ஒளி விரியா நிற்கும்.

திங்களும் மேற்குமலையை அடைந்து, மிக்க இருள் வந்து தங்குமானால், வீட்டெலியை உணவாகவுடைய வலிய வாயையுடைய கூகைச் சேவலானது, பேய் இயங்கும் நடுயாமத்து உள்ளம் அழிவுண்டாகக் குழறா நிற்கும். மரப் பொந்தில் வாழும் அக்கூகைச் சேவல் குழறாது உறங்குமாயின், மனையின் கண் செறிக்கப்பட்ட கோழி தனது மாட்சிமைப்பட்ட குரலை எடுத்துக் கூவா நிற்கும்.

இவை எல்லாம் உறங்கின ஒரு காலை, ஒருநாளும் என்னி டத்தினின்று பிரிந்து நில்லாத நெஞ்சினையுடைய தலைவர் வாரலர், அதனால் -

பருக்கைக் கற்கள் பெய்துள்ள சதங்கைகள் ஒலிக்க, ஒட்டத்திலே மிக்கு, ஆதியென்னும் கதியில் தேர்ந்த, ஆயும் செலவினையுடைய நல்ல குதிரைகளையும், காவல் வேலியையு முடைய தித்தனது உறையூரைச் சூழ்ந்த, கல்முதிர்ந்த புறங்காடு போல, நம் களவு பல இடையூறுகளையும் உடையதாயிருந்தது தோழி!

என்று, இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. இரும்பிழி - மிக்க தேன், கள். அழுங்கல் - ஆரவாரம், 3. மல்லல் - வளமை ஆவணம் - கடைத்தெரு. மறுகு - குறுந்தெருக்கள். 5. பிணிகோள் - பிணித்துக் கொள்ளும். 6. கடுகுவர் - விரைவர். இளையர் - காவலிளையர். 8. சுரித்தல் - சுருண்டிருத்தல். தோகை - வால். ஞாளி - நாய். 9. அரவவாய் - அரவமிகுந்த வாய். 10. பகலுரு உறழ பகலுருவினைப் போன்ற. 1. மண்டிலம் - திங்கள் மண்டிலம். 12. கனையிருள் - மிக்க இருள். 14.கழுது-பேய் அழிதக-அழியும்படியாக 19.அரிபரல் புட்டில் - கெச்சை, 20. ஆதி - ஆதியென்னும் கதி; நேரான ஓட்டம் 21. நொச்சி - காவல். 22. கல்முதிர் - கற்கள் முதிர்ந்த

விளக்கம் : இப் பாட்டு இரவுக்குறி. சிறைக்காவலின் கடுமையை உணர்த்துவது.

மேற்கோள்: இப்பாட்டுச் 'சிறைக்காவல் எல்லாம் வந்த செய்யுள்’ என்பர் களவியல் உரைகாரர். (சூ.30)