பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 189


அண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், 5

அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழையணி யானை இயல்தேர் மிஞ்லியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள்வாள் மயங்குஅமர் வீழ்ந்தெனப், புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று 10

ஒண்கதிர் தெறாமை, சிறகளிற் கோலி,
நிழல்செய்து உழறல் காணேன், யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினஞ் சிறந்து,
உருவினை நன்னன், அருளான் கரப்பப்,
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர் 15

குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்,
வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை
அகுதை களைதந் தாங்கு, மிகுபெயர்
உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல,
நாணுவரை நில்லாக் காமம் நண்ணி 20
 
நல்கினள், வாழியர், வந்தே-ஒரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாறும்,
ஓர்.நுண் ஓதி மாஅ யோளே!

‘வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்’ என்பான். பெரிதும் வள்ளன்மை நிறைந்த உள்ளம் உடையவன். இரவின் கடையாமத்திலே யானாலும், அவனுடைய நீண்ட கடை வாயிலிலே சென்றுநின்று, தேன் முதிர்ந்த அவனுடைய மலையுச்சிகளைக் கொண்ட குன்றத்தைப் போற்றிப்பாடும் சிறிய பிரப்பங் கோலையுடைய அகவுநர்கள் விரும்பினால், வெண்மையான கொம்புகளையும், தலைமைச் செருக்கையுமுடைய யானை யானாலும், அவருக்குக் கொடுத்து, அந்த வள்ளன்மையிலே மகிழ்வும் கொள்பவன் அவன். அத்துடன், அனைத்து உயிர்களிடத்தும் அருள் பொருந்தும் வாழ்க்கையினையும் உடையவன். நெற்றிப் பட்டம் அணிந்த யானை களையும், விரைந்து செல்லும் தேரினையும் உடைய மிஞ்சிலி என்பவனோடு, பாழிப்பறந்தலை என்னுமிடத்திலே அவன் செய்த போரிலே, நண்பகற்பொழுதிலேயே, ஒள்ளிய வாட்படை மயங்கிய போரினாலே புண்பட்டு அவன் மடிந்து வீழ்ந்தான்.