பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அகநானூறு - மணிமிடை பவளம்



அழகிய இடத்தையுடைய வானத்திலே விளங்கும் ஞாயிற்றினது ஒளியுடைய கதிர்கள், அவன் உடலைக் காய்ந்து வருத்தமற் பொருட்டுப் பறவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடித்தம் சிறகுகளால் பந்தரிட்டு நிழல்செய்து காத்தன. அதனை என் கண்ணால் யான் காணமாட்டேன்’ என்று, படுகளம் காண்பதற்கும் செல்லாதவனாகச், சினம் மிகுந்தவனாக, அச்சமூட்டும் போர்த்தொழிலனான நன்னன் என்பான், உள்ளத்திலே அருள் இல்லாதவனாக, எங்கோ சென்று மறைந்து கொண்டான்.

மிகவும் வருத்தமுற்று வந்த வேளிர் மகளிர்கள் பலரும், விளங்கிய பூக்களாலாகிய தம் அழகிய மாலைகளைப் பிய்த்தெறிந்து, அக்களத்திலே அழுது கலங்கினர். அவர்களுடைய வருத்த மிகுதியைப், பழி நீங்க மாற்றார் படையினை வெல்லும், விளங்குகின்ற பெரிய சேனையையுடைய அகுதை என்பவன் சென்று நீக்கினான். அது போல,

ஓரி என்பானது பல பழங்கள் தூங்கும் பலாமரங்களின் பயன் நிறைந்துள்ள கொல்லிமலையிலே, பூக்கும் கார்காலத்துப் பூக்களைப்போன்ற, நறுமணமுடைய அழகும் மென்மையு முடைய கூந்தலினாளும் மாமை நிறத்தினளுமான நம் தலைவியும், உப்பினால் அடைத்தவிடத்து அந்தத் தடையினால் கட்டுப்பட்டு நில்லாது உடைத்துக் கொண்டு பெருகிச் செல்லும் பெருமழையின் வெள்ளத்தைப்போல, நாணத்தின் எல்லையிலே அடங்கிக் கட்டுப்பட்டு நில்லாத, காமத்தைப் பொருந்திய வளாயினாள். நம்பால் வந்து நமக்கு அருளும் செய்தனள், அவள் வாழ்வாளாக! -

என்று, புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1.யாம இரவு-இரவின் நடுச்சாமமும் ஆகும். நெடுங்கடை - நெடிய கடைவாயில்.2.தே முதிர் சிமையம்-தேன் முதிர்ந்திருக்கும் மலையுச்சிகள். குன்றம் பாடும் - குன்றத்தைப் போற்றிப் பாடும். 3. நுண்கோல் - சிறு பிரப்பங்கோல். 6 அளியியல் வாழ்க்கை - அருளோடு பொருந்திய வாழ்க்கை. 9. வாள் மயங்கு அமர் - வாள் ஒன்றுடன் ஒன்று மோதி மயக்கங் கொள்ளுகின்ற போர். 12. உழறல் - வட்டமிட்டுப் பறந்து கொண்டிருத்தல்.16. குரூஉப்பூம் பைந்தார். விளங்கும் பூக்களால் ஆகிய அழகிய மாலை. அருக்கிய - சிதைத்த, 19. சிறை - அணை; தடை 20. வரை - எல்லை. 24 ஏர் - அழகு. நுண்மை - மென்மை.