பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 191



விளக்கம்: ஆய் எயினன் வீழ்ந்தானாகக் கலங்கிய மகளிர்க்கு, அகுதை உதவிப் பழிதுடைத்ததுபோலக் காமத்தால் உளமழிந்த தனக்கும் அவள் வந்து தண்ணளி செய்தாள் என்றாள். காமம் மீதுறும்போது, அதனை நாணத்தாலும் தடை செய்ய முடியாது என்ற கருத்தினை, “நாண்வரை நில்லாக் காமம்’ என்ற தொடர் சிறப்பான முறையிலே விளக்குவதாகும்.

அகுதை, நன்னன், வெளியன், வேண்மான் ஆய் எயினன் ஆகியோரின் வரலாறுகளை எல்லாம் பின்னிணைப்பிலே காண்க.

பாடபேதங்கள்:11, தெருமற் சிறகரில்.12. காணெனச்சினை.இ. 16. தாராக்கிய 17 வரைவிடக் கடக்கும். 20. நாணுவரையில்லா.

209. நினையாது இருத்தலோ அரிதே!

பாடியவர்: கல்லாடனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது; பிரிவிடை வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழி சொல்லியது எனவும் பாடம். சிறப்பு: பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆலங்கானப் போர்; கள்வர் கோமான் புல்லியின் வேங்கட நெடுவரை, முள்ளுர்க்கு மன்னனான காரி ஓரியைக் கொன்று கொல்லியைச் சேரர்களுக்குத் தந்தது; கொல்லிப் பாவையின் பேரழகு முதலியன,

(தலைமகனின் பிரிவினால் வாடி மெலிந்திருக்கும் தலைவிக்குத் தோழி, அவளை ஆற்றுவித்து அமைதி கொள்ளச் செய்வது கருதி இப்படி உரைக்கின்றாள். எத்துணைச் செல்வமும் புகழும் பிறவும் பெற்றாலும், நின்னுடைய பேரெழிலை அவர் நினையாதிருத்தல் அரிது’ என்று சொல்லும் தோழியின் சொல் நயத்தினை இச் செய்யுளிற் காணலாம்)

தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள், அலரே,
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்,
எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த - 5

ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி!-அவரே,
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்துஅகன்றனர் ஆயினும், நிறைஇறந்து 10