பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★195



211. நீரின் ஒளியும் ஊரலரும்!

பாடியவர் : மாமூலனார். திணை : பாலை துறை: பிரிவின் கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. சிறப்பு: எழினியின் பற்களைப் பறித்து வந்து வெண்மணிவாயில் என்னும் இடத்திலே மத்தி என்பவன் பதித்து வைத்ததும், வேங்கடமலையின் சிறப்பும் பற்றிய செய்திகள்.

(தலைவியைத் தலைவன் பிரிந்து வேற்றுநாட்டிற்குச் சென்றிருந்தான். அவன், வருவேன்’ என்று உறுதிகூறிச் சென்ற கார் காலமும் வந்து கழிந்தது. ஆனால், அவன் அப்போதும் வரவில்லை. அதனால், தலைவியின் ஏக்கமும் மெலிவும் அதிகமாகத் தோழி ‘அவன் தவறாது வருவான்’ எனத் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.)

கேளாய், எல்ல! தோழி-வாலிய
சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்
திண்நிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும்,
தண்மழை ஆலியின் தாஅய், உழவர் 5

வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெறுநிரை
'பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக், 10

கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல்லெறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை, 15

நீர்ஒலித் தன்ன பேஎர்
அலர்நமக்கு ஒழிய, அழப்பிரிந் தோரே.

ஏ.டீ, தோழி! யான் சொல்வதனைக் கேட்பாயாக:

கன்றுகளையுடைய பெரிய யானைநிரையானது பள்ளத் திடையிலே வீழ்ந்து அகப்பட்டுக்கொள்ள, அவற்றைப் பிடிப்பதான அந்தப் பூசலிடத்தே, எழினி என்பவன் மட்டும் தன் ஆணைப்படி வராமற் போகவே, சோழன் மிகவும் சினங் கொண்டவனாயினான். சோழனின் ஏவலின்மேல், மத்தி என்பவன், எழியினின்மீது படைகொண்டு போரிடச் சென்றான்.