பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

அகநானூறு - மணிமிடை பவளம்

        நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்
        தாள்புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
        நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு,
        வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
        தண்துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5

        பெட்டாங்கு மொழிப’ என்ப; அவ்வலர்
        பட்டனம் ஆயின், இனியெவன் ஆகியர்:
        கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்,
        கழனி உழவர் குற்ற குவளையும்,
        கடிமிளைப் புறவின் பூத்த முல்லையொடு, 10

        பல்லிளங் கோசர் கண்ணி அயரும்,
        மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
        எறிவிடத்து உலையாச் செறிசுரை வெள்வேல்
        ஆதன் எழினி அருநிறத்து அழுத்திய
        பெருங்களிற்று எவ்வம் போல 15

        வருந்துப மாதுஅவர் சேரியாம் செலினே!

கயிற்றினைக் கொண்ட மெல்லிய கோலினாலே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பாணர்களது மகள், புனலின் அடைகரையிலே அகப்படுத்திய வரால்மீனைப், பன்னாடையினாலே அரிக்கப்பெற்ற கள்ளினைக் குடித்துக் களித்திருந்த தன்னுடைய தந்தைக்கு, வஞ்சிமரத்து விறகினாலே தீயெரித்துச் சுட்டு வாயிலே உண்பிப்பாள். அத்தகைய குளிர்ந்த நீர்த் துறைகளையுடைய ஊரனின் பெண்கள், எம்மைத் தம் மனம் போன படியெல்லாம் இகழ்ந்து பேசுவார்கள் என்பர்.

அந்தப் பழிக்கு யாம் ஆட்பட்டனமானால், இனி யாதாயினும்ஆகுக!

அவர்களுடைய சேரியிடத்தே யாம் செல்வோமானால், கடலாடும மகளிர்கள் கொய்துவந்த புலிநகக் கொன்றைப் பூவினையும், வயல் உழுபவர் பறித்துவந்த குவளைப் பூவினையும், காவலையுடைய காட்டிடத்தே பூத்த முல்லைப்பூவுடனே சேர்த்துப் பலரான இளங்கோசர்களும் கண்ணியாகக் கட்டிச் சூடி மகிழ்வர்; அத்தகைய மிக்க வளம் பொருந்திய செல்லூர்க்குக் கோமானாகிய ஆதன் எழினி என்பவனின், மாற்றாரைக் குறித்து எறியுமிடத்துக் குறிபிழையாத சுரை செறிந்த வெள்ளிய வேலானது, தன்னுடைய அரிய மார்பிலே வந்துதைத்த பெரிய களிற்றினது துன்பத்தைப்போல, எம்மைப் பழித்த நெஞ்சம் புண்பட்டு, அவரும் வருந்துவர் என்பதுமட்டும் உண்மையாகும். - .