பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

அகநானூறு - மணிமிடை பவளம்


பழியொடுபட்ட தன்மையை நினைந்து வருந்த வில்லை. செல்வமாக வளர்ந்த அவள், எவ்வாறு பாலை வழியிலே தன் பாதம் நோக நடந்து செல்வாளோ என்பதை நினைந்தே வருந்துகிறது)

        சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி.
        ஓரை ஆயமொடு பந்துசிறிது எறியினும்,
        ‘வாராயோ!’ என்று ஏத்திப் பேர்இலைப்
        பகன்றை வான்மலர் பணிநிறைந் ததுபோல்
        பால்பெய் வள்ளம் சால்கை பற்றி, 5

        ‘என்பாடு உண்டனை ஆயின் ஒருகால்
        நுந்தை பாடும் உண்’ என்று ஊட்டிப்,
        ‘பிறந்ததற் கொண்டு சிறந்தவை செய்துயான்,
        நலம்புனைந்து எடுத்தஏன் பொலந்தொடிக் குறுமகள்
        அறனி லாளனொடு இறந்தனள் இனி என, 10

        மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
        பொன்வார்ந் தன்ன வைவால் எயிற்றுச்
        செந்நாய் வெரீஇய புகர்உழை ஒருத்தல்
        பொரி அரை விளவின் புன்புற விளைபுழல்,
        அழல்எறி கோடை தூக்கலின், கோவலர், 15

        குழல்என் நினையும் நீர்இல் நீள்இடை,
        மடத்தகை மெலியச் சாஅய்,
        நடக்கும் கொல்?” என, நோவல் யானே.

சீர்மை கெழுமிய பெரிய மனையின்கண்ணே, சிலம்புகள் ஒலிமுழங்க நடந்து கொண்டிருந்தவள் அவள், விளையாடும் தன் தோழியர்களுடன் சிறிதுபொழுதே பந்து எறிந்து விளையாடினாளாயினும், களைத்திருப்பாளே எனக் கருதிப், ‘பெரிய இலையினையுடைய பகன்றையின் வெண்மலர்களிலே பனி நிறைந்ததுபோலப்' பால் பெய்த கிண்ணத்தைச் சால்புடைய கையிலே பற்றிக் கொண்டு, ‘என் பகுதிக்கு இதனை உண்டனையானால் இனி ஒருமுறை உன் தந்தையின் பகுதிக்கும் உண்பாயாக’ என்று,அவளை ஊட்டி வளர்த்தேன். அவள் பிறந்ததன் முதலே பற்பல சிறப்புக்களையும் செய்து, யான் அவள் நலத்தைப் பேணினேன். பொற்றொடி அணிந்த என்னுடைய இளைய மகளான அவளோ, அறன் இல்லாத தன்மையாளனான அவள் காதலனுடன், இப்போது, எம் இல்லை விட்டு நீங்கிச்சென்றனள் என்பதை மறந்து அமைந்து இருக்கமாட்டாத, என் உள்ளத்திற்காகவும் யான் வருந்துவேன் அல்லேன்-ஆனால்,