பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 217


        வதுவை அமர்ந்தனர் நமரே அதனால்
        புதுவது புனைந்த சேயிலை வெள்வேல்- 5

        மதிஉடம் பட்ட மைஅணற் காளை
        வாங்குசினை மலிந்த திரளரை மராஅத்துத்
        தேம்பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டு, நின்
        தண்நறு முச்சி புனைய, அவனொடு
        கழைகவின் போகிய மழைஉயர் நனந்தலை, 10

        களிற்றிரை பிழைத்தலின் கயவாய் வேங்கை
        காய்சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
        இரும்பிடி இரியும் சோலை
        அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.

பூவரும்புகளிலே விளையும் தேனினால் ஆகிய கள்ளின் தெளிவினை நிரம்பக் குடித்தனர்; நல்ல மனையினை அலங்கரிக்கும் செயலையும் செய்யத் தொடங்கினர்; புது மணலைக் கொணர்ந்து வீட்டிற் குவித்தும் வைத்துள்ளனர்; ‘பொலிவுள்ள கூந்தலை உடையவளான எம்முடைய மகளுக்குத் திருமணம் என்றும் கூறியவராயினர். இவ்வாறெல்லாம் நம்மவர் நின் மணத்திற்கு வேண்டியன எல்லாம் செய்தனர். அதனால்,

புதிதாக வடித்துக் கொள்ளப்பட்ட செவ்வையான இலைபொருந்திய வெள்ளிய வேலினையும், நின்னோடு உள்ளத்தாலே ஒன்றுபட்ட செவ்வியையும், கரிய தாடியினையும் உடைய காளைப்பருவத்தினன் நம் தலைவன்:

வளைவான கிளைகள் மிகுந்த திரண்ட அரையினையுடைய வெண்கடப்ப மரத்தினது, தேன் சொரியும் மென்மையான பூங்கொத்துக்களைத் தளிர்களுடனே கொணர்ந்து நின்னுடைய தண்மையான மணமுள்ள மயிர்முடியிலே சூடி மகிழுமாறு,

மூங்கில்கள் தம் அழகு அழிந்துபோகுமாறு, மேகங்கள் வானத்து உயரே பெய்யாது போகிய பரந்த பாலையிடத்தே, களிறாகிய தன் இரையானது தப்பிப் போயினதால், பெரிய வாயினையுடைய வேங்கையானது. கொதிக்கும் சினம் மிகுந்ததாக முழங்கும். அதனைக் கேட்டு அஞ்சிய கரிய பெண்யானையானது தானும் நிலைதடுமாறி ஒடிக்கொண்டிருக்கும். அத்தகைய சோலையினையுடைய அரிய சுரநெறியிலே, நீயும் அவனுடன் கூடிச் சென்றுவிடுதலை யானும் விரும்பினேன்.

என்று, தலைமகற்குப் போக்குடன்பட்ட தோழியானவள் தலைமகட்குப் போக்குடன்படச் சொன்னாள் என்க.