பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 221



பன்றியின் வளைந்த கொம்பினைப் போன்ற ஆர்க்கினையுடைய, நெடிய பெருங்காயினை உடையது அரும்பு முதிர்ந்த முருக்கமரம். அதன் கிளையைச் சேர்ந்திருந்த பெரிய பாறையானது, மிகவும் வேகமாக வரும் கடுங்காற்று மூட்டுதலால், வெம்மையான காட்டிடத்தே நெருப்பால் மூடப்பெற்ற யானையைப் போன்று, வியக்கத்தக்கவாறு தோன்றும். நிழலற்றுப் போன ஒமை மரங்களையுடைய நீரற்ற அத்தகைய நீண்ட பாலை வழியினூடே கடந்து சென்றனர் நம் காதலர். ஆயினும்,

முதுகுப் புறத்திலே தொங்குவதாக, அழகிய மூங்கில் போன்று விளங்கும் நீண்ட தோள்களிலே படிந்ததாகத், தும்பி என்னும் வண்டினது கூட்டங்கள் போலத் தோன்றும், சுரிந்து நெளிவுகளுடன் விளங்கும் நுண்மையான இயல்பு பொருந்தியது, நின் கூந்தல், நின் வருத்தமெல்லாம் அழியுமாறு அதனை முழுமையும் வாரி முடித்துக், காட்டு மல்லிகையின் நல்ல அரும்புகள் மலர்ந்த இதழ்களுடனே தண்மையான நறுமணமுள்ள குவளை மலரையுஞ் சேர்த்துத் தொடுத்த மாலையினைச் சூடி, அந்தக் கூந்தலிலே பொருந்திய துயிலினை நின்னிடத்தே பெறுவதனை மறந்து, அவர் கண்ணுறங்குதல் என்பது ஏது?

என்று? பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தினாள் என்க.

சொற்பொருள்: 1. வல்லியர் - வன்மையுடையர். 4. உளை ஆர்க்கு. 6. கடுவளி கடுங்காற்று; அது மிக விரைவாக வீசுதல் பற்றிக் காய்சினக் கடுவளி யாயிற்று. 11 - 12 தும்பி அரியினம் - தும்பியாகிய வண்டினம்; அதன் கருமை பற்றிச் சொல்லப் பட்டது.12 சுரிவணர் ஐம்பால் நுண்கேழ் சுரிதலையும் வளைவு களையும் ஐவகையாக முடித்தலையும் மென்மையினையும் பொருந்திய கூந்தல்.

பாடபேதங்கள்: 4. நெடும் பொங்கர். 6. வெங்கட். 13. நுண்துகள் அடங்க,

224. இரவுப் பொழுதே செல்க!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்; ஆவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் எனவும் பாடம் திணை: முல்லை. துறை: வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.