பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 227



உயரமான வெண்மருத மரத்தோடு வஞ்சி ம்ரத்தையும் சாய்த்துக்கொண்டு, விடியற்காலை வேளையிலே வந்த காவிரியின் பெருவெள்ளத்திலே, தொடி அணிந்த முன் கைகளை உடையவளான, விரும்பிய பரத்தையுடனே நேற்றுப் புனலாடினாய்.

வலிமிகுந்த ஆற்றலுடைய பாணன் என்பவனோடும் கூடியவனாகப்,போர் செய்தலிலே வல்ல தானைவீரர் பெருக்கத்தினை உடைய கட்டி என்பவன், தார்மலிந்த தித்தன் வெளியன் என்பவனது உறையூரின் நாளவையின் கண்ணே, மற்போரிட வந்தான். வந்தவன், இனிய ஓசையையுடைய தெளிவாக இசைக்கும் கிணையினது ஒலியினைக் கேட்டுத் தித்தன் வெளியனின் பேராற்றலை உணர்ந்தான். அதனால், அச்சங்கொண்டு அவனுடன் போரிடாதேயே ஒடிவிட்டான்.

நேற்று நீ புனலாடியதால் இன்று எழுந்த ஊரலர். அப்படிக் கட்டி ஒடியபோது எழுந்த ஆரவாரத்திலும் பெரிய தாயிற்றே!

என்று கூறித் தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தனள் என்க.

சொற்பொருள்: 1. உணர்குவென் - உண்மையாகக் கருதி உணர்வேன். மாயம் - வஞ்சனை. 2. யாணர் - புது வருவாய். 3. மடிவை - மடிப்புடைய உடை 4 குரூஉப் புனல் - விளக்க முடைய புதுப்புனல், பைஞ்சாய் - ஒருவனாகக் கோரை7. எறுழ் வலிமை. 10. விடியல் - அதிகாலை நேரம் 11. நீ வெய்யோளொடு - நின்னால் விரும்பப்பட்டவளோடு 12. கவ்வை - அலர்.13 முன்பு - ஆற்றல்.பாணன் - வடநாட்டு ஒரு வீரன்; மற்போரில் வல்லவன். 14 உறந்தை- உறையூர் நாளவை - திருவோலக்கம், நாள்தோறும் கூடும் அரசவை.

விளக்கம்: போரிடும் செருக்கோடு வந்தவன், நாளோலக்கத்து எழுந்த கிணைப்பறையின் இசைகேட்டே அஞ்சி ஓடியது பெரிதும் பழிப்பிற்கு உரிய செயலாகும். அப்போது எழுந்த ஆரவாரம் அவனை இழித்துப் பேசுவதனால் எழுந்தது. அதுபோலவே, நின் பரத்தமை உறவினையும் ஊரவர் மிகுதியாக இழித்துப் பேசுகின்றனர் என்றனள். அதனால், தலைவி ஊடியிருப்பதனையும், அவன் கருத்துக்கு இசைய மாட்டாள் என்பதையும் உரைத்தனள் ஆயிற்று.