பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

அகநானூறு - மணிமிடை பவளம்


        தொன்னலம் சிதையச் சாஅய்’
        என்னள்கொல் அளியள்?” என்னா தோரே.

தோழி! அம்ம! வாழ்க! இதனைக் கேட்பாயாக!

கொண்டலாகிய கார்மேகங்கள், முதலிலே பயன் தரும் நிவங்கள் எல்லாம் நெகிழுமாறு பெய்தன; பின் அவ்விடத்தே பெய்தலை வெறுத்தனவாய் மலைகளைச் சென்று சேர்ந்தன. அங்கே தங்குதலுற்று,இரவெல்லாம் பொங்கித் துளிகளைப் பெய்தன. அதனால் எழுந்த வாடைக்காற்றோடு, உயர்ந்த அழகிய இதழினையுடைய தோன்றியானது, சுடர்கொண்ட அகலினது தன்மை போலச் சுருங்கியிருந்த தன் பிணிப்பு அவிழ்ந்து மலர்ந்தது. சுரிந்த அரும்புகளையுடைய முசுண்டைச் செடியின் பொதியவிர்ந்த பெரிய பூக்கள், வானத்திலே அழகாகத் தோன்றும் மீன்களைப் போலப் பசுமையான புதர்களை அழகு செய்தன. நண்டுகள் தம்முடைய மண் அளைகளினுள்ளே சென்று சேர்ந்தன. அகன்ற வயல்களிலே கிளைத்து விரிந்துள்ள கரும்பின் திரண்ட காம்பினையுடைய பெரிய பூவானது, மழையிலே நனைந்த நாரையைப் போல ஈரங்கொண்டவையாக வளைந்து விளங்கின. மிகுதியான கடுஞ்சினத்தினாலே அச்சத்தை எங்கும் தோற்றுவித்தவாறு தனித்தன்மை மிகுதியாகக் கொண்ட, பண்பு இல்லாத வாடைக் காற்றானது எழுந்து வீசி, மயங்குதலையுடைய மாலைக்காலத்தோடுஞ் சோர்ந்து, இரக்கமில்லாமல் வருத்தத் தொடங்கிற்று.

‘நுதலிடத்தே தங்குதலைக்கொண்ட அயலவர் அறியும் பசலையோடு, பழைய பிற நலம் எல்லாம் அழியுமாறு மெலிந்து, என்ன நிலையாவாளோ? இவள் இரங்கத்தக்கவள்! என்று கருதாதவரான நம் காதலர், பொருள் தேடுதலையே விரும்பினரோ? நம்மை நினைக்கவும் மாட்டாரோ? அல்லது, நினைந்தும், செய்யும் வினையின் சிறப்பின் காரணமாக மறந்தனரோ?

என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதுரத் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. பொருள் புரிந்து - பொருளை விதும்பி. 2. உள்ளார் - நினையார். 3. சிறந்த செய்தியின் - சிறந்த செயலின் காரணமாக.4 குழைய நெகிழ.5 விண்டு-மலைகள். கொண்டல் மாமழை - கொண்டலாகிய கார்மேகம். 11. களவன் - நண்டு. 12. வான் பூ - பெரிய பூ. 14. நாமம் - அச்சம் 17, இறை கொண்டு - தங்குதலை மேற்கொண்டு.