பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

அகநானூறு-மணிமிடை பவளம்


மேலிருப்பதாகிய தேன் கூடுகள் அசையும் நெடிய உச்சியினையுடைய மூங்கில்களைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் மலைக்குரிய நாடனது,

முன்பு நாம் தழுவிய மார்பினை, முகிழ்த்து வருதலை’யுடைய நம்முடைய இளைய முலைகள் அமுங்குமாறு, பன்முறையும் தழுவுதலே, நமக்கு மிகவும் பொருத்தமுடையதாகும்.

என்று தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலை மகட்குச் சொல்லுவாளாய்ச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. அலங்கல் மென்சினை - அசைகின்ற தன்மையுடைய மென் கொம்புகள். 2. பொன்புரை நுண்தாது - பொன்போன்ற நிறமுடைய நுண்ணிய பூந்தாது. 3. கலவம் - தோகை உறைப்ப வந்து வீழ. 4. அவிர்பொறி . ஒளியுடைய புள்ளிகள், 5. கொடுங்குரல் - வளைந்த தினைக்கதிர். 6. செந்தார். சிவந்த ஆரம்; கடிந்தோன் - வெருட்டியவன். 7. பண்பு - இயல்புகள்; கூடிப் பிரியாதிருக்கும் நிலையின்றி இடையிலே கூடுதல் மறந்த தான பண்பு. 8 முறிபுரை எழில் தளிர்போன்ற ஒளியும் மென்மையும் கொண்ட மேனியின் எழில். பிரப்பு - பிரப்பரிசி. 10. அறியா வேலன் - உண்மை அறியாத வேலன். 13. மறி ஆட்டுக் குட்டி 16. மூழ்க. - அமுங்க முலைகள் அவன் மார்பைத் தழுவுதலால் அழுந்த முகிழ்த்து வரல் - அரும்பிப் புடைத்து எழல். 18. நறை - தேன்கூடுகள். கால் யாத்தல் - நிலைபெற்றிருத்தல், 21. பிரசம் - தேன்.

உள்ளுறை: வேங்கையின் நுண்தாது தன் கலவத்து உதிர்ந்து வீழ, அதனால் அழகுபெற்ற மயில் களிப்புற்று ஆடுவது போலத், தானும் அவன் மார்பினைத் தழுவி, அவன் மார்பிடத்துச் சாந்தம் படியப் பெற்றால் களிப்படைபவள் என்றனள். சந்தனக் கொம்பினைத் தீண்டத் தேனிறால்கள் அசைவதுபோல, அவனைத் தழுவத் தன் மேனி வருத்தம் எல்லாம் நீங்கித், தன்னுடைய பழைய எழில் வந்து நிறையும் என்றனள். நிறையவே, அன்னையின் ஐயமும் நீங்கும் என்பது குறிப்பாயிற்று.

விளக்கம்: அன்னை, மகளின் குடிமைப் பண்பிலே உறுதி உடையவளாதலின், தன் மகள் பிறன் ஒருவனுடன் களவு உறவு கொண்டதனாலேயே மேனி நலம் கெட்டுத் தோன்றுகின்றனள் என்று எண்ணாதவளாயினாள். முருகு அணங்கியதனால் விளைந்தது போலும் என வேலைனை வேண்டவும் முற்பட்டனள். அந்த அன்னையின் நம்பிக்கை சிதையாமலிருக்கும்