பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

அகநானூறு - மணிமிடை பவளம்


போலும் அவர் வாழ்க! என்று சொல்லித், தனது பலவிதழ்களையுடைய தாமரை மலர்போன்ற குளிர்ச்சியான கண்களின் நல்ல உட்புறமெல்லாம் சிவக்குமாறு,அரிய துயரத்தை உடையவளாயினாள், நம் காதலியாகிய அவள்” இவ்வாறு சொல்லிப் பாணனும் நாம் வீடு திரும்புவதை விரும்பியவனாகத் தூது வந்துள்ளான். நாம் எண்ணி வந்த செயலும் முடிந்துவிட்டது. அதனால், நீயும் புல்லைத் தின்னுகின்ற குதிரைகளைப் பூட்டி, நெடிய தேரினை, மிகவும் விரைவாகச் செலுத்துவாயாக, என்று, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. பசை - ஈரம். பச்சை - தோல், நெய் - எண்ணெய். 2. மாச்சிறைப் பறவை - கரிய சிறகுகளையுடைய வெளவால். 3. முதுமரம் - பழைய மரம், அதன்கண் உள்ள பொந்துகளில், 4. நகைவாய் - சிரிக்கும் வாய், புன் சிரிப்புப் போன்ற கடிமகள் - மணமகள். 6. தண்பதம் - குளிர்பதம்.9. கண் நல்லகம் - கண்களின் நல்ல உட்புறம்.

விளக்கம்: பகலிற்றங்கிய மரத்தை வாடவிட்டு மாலையிலே போய்விடும் வெளவால் போன்று, அவனும் தான் கூடியிருந்த இல்லைவிட்டுப் பிரிந்து அதனை வறுமையுறச் செய்தனன். முல்லையும் வண்டினத்தைத் தன்னைவிட்டு அகன்று செல்லாது தடுத்துக் கொண்டிருக்குங் காலத்து, அவள் தன் காதலனைத் பிரிந்துள்ளனள் எனக்கொள்க.

மேற்கோள்: ‘முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே’ என்றலின், தானே குறுநில மன்னன் சென்றதாம்’, என “வேந்து வினையியற்கை"என்னுஞ் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினார்.

பாடபேதங்கள்: 1.பகைபடு பச்சை10.வருந்துவள் அவளென. 13. நெடுந்தேர் ஏவுமதி.

245. வாரலென் யானே!

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: பாலை. துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறித் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது. சிறப்பு: ஒட்டகம் பாலையைக் கடக்கப் பயன்பட்டமை.

(பொருள் தேடிவருதல் வேண்டுமெனத் தன் நெஞ்சத்து ஆர்வம் மிகுதியாக, அதனால் ஏற்படும் பிரிவுத் துயரினைத் தான்பொறாத தலைவியினை எண்ணிய தலைவன், நெஞ்சுக்கு இப்படிக்கூறித், தன் போக்கை நிறுத்திக் கொள்ளுகின்றான்)