பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 269


        இல்வந்து நின்றோற் கண்டனள் அன்னை,
        வல்லே என்முகம் நோக்கி, 15

        ‘நல்லை மன்!” என நகூஉப் பெயர்ந்த தோளே!

தோழி! நேற்றைக்கு நடந்த சிரிப்பதற்கு இடனாகிய செய்தி ஒன்றினைச் சொல்லுவேன் கேட்பாயாக:

வேட்டுவர்கள் பன்றி வேட்டைக்குச் சென்றனர். நாய்கள் பன்றிகளை வெருட்டின. அப்போது ஒர் ஆண் பன்றியானது வலியுடைய அவ் வேட்டை நாய்களை எதிர்த்து ஒட்டியது. வேட்டுவர் தன் இனத்தை நெருங்குதலையும் தடுத்தது. வலியமைந்த தன் குட்டிகளைத் தழுவிக்கொண்டே, தொங்கும் முலையினையுடைய தன் பெண் பன்றி செல்லுமாறும் பேணி நின்றது. அதன்பின் காட்டினின்றும் வெளிவந்து, அரிய பொந்தாகிய ஒரு முடுக்கிலே வேட்டையாடும் ஆட்களை எதிர்ப்பதற்காகவும் வந்து நின்றது. அத்தகைய ஆற்றலையுடைய அந்தப் பன்றியினை, வேட்டுவனும் நெருங்கினான். அதன் நிலையினையும் நோக்கினான்.

“மடுத்தல் பொருந்திய ஆற்றைலையுடைய தனது படையானது புறங்காட்டி ஒடவும், தானும் அவற்றைப் போல ஒடிச் செல்லாது நின்று, பகைவர் வருகின்ற அரிய வழியிலே அவரைத் தடுத்து நிறுத்திப் போரிடும் ஆற்றல் வாய்ந்த எம்முடைய பெரிய வல்லமையாளனைப் போன்றது இதுவும் என வியந்து நின்றான்.

தன் வில்லிலே தொடுத்த கூரிய முனையையுடைய அம்பினை அதன்மேல் எய்யாது பெயர்ந்தும் சென்றான். அத்தகைய மலைநாட்டைச் சேர்ந்தவன் நம் தலைவன். அவன்.

செறிந்துள்ள புதர்கள் பற்றிக்கொள்ள, அதனால் அறுபட்டுப் புரிகள் அவிழப் பூக்கள் உதிர்கின்ற மாலையானது, திரண்டு நிமிர்ந்த தோள்களிலே ஏற்றின் திமிலின்கண் கிடக்கும் கயிற்றின் அழகுடனே கிடந்து அசைந்து கொண்டிருக்க, நம்முடைய வீட்டிலேயும் வந்து நின்றான்.

நின்ற அவனை, நம் அன்னையும் கண்டனள். விரைய என் முகத்தினையும் பார்த்தனள். “நீ மிகவும் நல்லவள்' என்றும் நகை தோன்றச் சொல்லிச் சென்றனள். (இனி என்ன செய்வோமோ?);

என்று, இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்குமாறு தோழி சொன்னாள் என்க.