பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 273



250. உறங்காத கடல் துறை

பாடியவர்: செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார். திணை: நெய்தல். துறை: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது.

(தலைவன் ஒருவனுக்காகத் தலைவியிடம் வந்து ‘ அவனுடைய காதலுக்கு இணங்குமாறு கேட்கிறாள் அவளுடைய தோழி. தலைவனின்மீது தன் தலைவிக்கு ஆராத காதல் உளதென்பதையும், அவர்களுடைய முன் உறவையும் அறிந்தவள் அவள். தன் கருத்தை வெளிப்படையாகக் கூறாமல், நயமாகவே உரைக்கின்றாள்.)

        எவன்கொல்?-வாழி,தோழி!-மயங்குபிசிர்
        மல்குதிரை உழந்த ஒல்குநிலைப் புன்னை
        வண்டிமிர் இணர நுண்தாது வரிப்ப
        மணம்கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக்
        கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக், 5

        கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித்,
        தாரன், கண்ணியன், சேரவந்து, ஒருவன்,
        வரிமனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
        மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
        அரும்படர் எவ்வமொடு பெருந்தோள் சாஅய், 10
        அவ்வலைப் பரதவர் கானலஞ் சிறுகுடி
        செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
        இறைவளை நெகிழ்ந்த நம்மொடு
        துறையும் துஞ்சாது, கங்கு லானே! 15

தோழி! நீ வாழ்க! மிகுந்த அலைகளினின்றும் தெறிக்கும் நெருங்கிய நீர்த்துளிகளால் வருந்திய உயர்ந்த நிலையினையுடைய புன்னையின், வண்டினம் மொய்க்கின்ற பூங்கொத்துக்களிலிருந்து நுண்மையான பொடிகள் உதிர்ந்து அழகு செய்ய, அதன் மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்ற மென்மையான மணல்மேட்டிலே, கூட்டமான ஆயத்தாரோடும் கலந்து, யாம் அழகுபொருந்த ஒருநாள் விளையாடியிருந்தோம். அவ்வேளையிலே, -

மொட்டினையுடைய நீண்ட தேரினை, ஏவலிளையரோடு நீக்கி நிறுத்திவிட்டு, மார்பிலே தாரும் தலையிலே கண்ணியும் உடையவனாக, ஒருவன் எம் அருகே வண்டல் மனையைப் புகழ்ந்தும் பேசினான். எவ்விதமான மறுமொழியும் எம்மிடமிருந்து பெறாதவனாகப் போயும் விட்டான்.