பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அகநானூறு - மணிமிடை பவளம்


அவள் நினைவு அவன் உள்ளத்திலே நிலைபெற்று நின்று அவனை வருத்த, அவன் சொல்லியதாக அமைந்தது செய்யுள்)

        நினவாய் செத்து நீபல உள்ளிப்,
        பெரும்புன் பைதலை வருந்தல் அன்றியும்,
        மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம்
        தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக்
        கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று 5

        அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க,
        மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
        காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு,
        அவ்வாங்கு உந்தி, அஞ்சொல் பாண்மகள்,
        நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில் 10

        பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
        கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறுஉம்
        பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி
        நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்
        பொன்னினர் நறுமலர்ப் புன்னை வெஃகித், 15

        திதியனொடு பொருத அன்னி போல
        விளிகுவை கொல்லோ, நீயே-கிளியெனச்
        சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப், பெரிய
        கயலென அமர்த்த உண்கண், புயலெனப்
        புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்: 20

        மின்னேர் மருங்குல், குறுமகள்
        பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே!

கிளி என்னுமாறு சிறியவாக மிழற்றுகின்ற செவ்வாயினையும்,பெரிய கயலென்னுமாறு மாறுபட்ட மையுண்ட கண்களையும், மேகம் என்னுமாறு முதுகிலே தாழ்ந்து இருண்டு விளங்குகின்ற கொத்தான ஐந்து பகுதியான கூந்தலையும், மின்போன்ற நுண்ணிய இடையினையும், இளமையினையும் உடைய தலைவியது பின்னே சார்ந்து நிற்றலைத் தவிராத மடமை நிரம்பிய நெஞ்சமே!

நின் சொற்களை நீதானே மெய்யாகக் கருதிப், பலப்பல நினைந்து, பெரிய புல்லிய துன்பமுடையையாய் வருந்துவ தன்றியும்;

மலையின் மேற்பாகத்தே தொடுத்த மிக்குச்செல்லுகின்ற வெள்ளத்தாலே முதல் நாளிலே பூத்த பெருமை பொருந்திய மலர், தண்ணிய துறைக்கண்ணே அசையா நிற்க,