பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 275



        நாம்படர் கூரும்அருந்துயர் கேட்பின்,
        நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண் 5

        தங்கலர்-வாழி, தோழி!-வெல்கொடித்
        துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்
        தோல்மூ தாலத்து அரும்பனைப் பொதியில்,
        இன்இன்ச முரசம் கடிப்பிகுத்து இரங்கத்,
        தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் 10

        பணியா மையின, பகைதலை வந்த
        மாகெழு தானை வம்ப மோரியர்
        புனைதேர் நேமி உருளிய குறைத்த
        இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,
        மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை 15

        வாயுள் தப்பிய அருங்கேழ், வயப்புலி
        மாநிலம் நெளியக் குத்திப், புகலொடு
        காப்புஇல வைகும் தேக்கமல் சோலை
        நிரம்பா நீளிடைப் போகி
        அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே. 20

தோழி! வாழ்வாயாக! நம் தலைவரிடத்தே தூதர்களும் சென்றுள்ளனர். முன்னர்ச் செறிவுடன் விளங்கிய நின் அணிகள் எல்லாம் இப்போது நெகிழ்ந்து கழல, வருத்தத்துடன் நாம் கலங்கியிருக்கின்ற மிகுந்த பொறுத்தற்கரிய துயரினை, அவர்கள் அவரித்தே எடுத்துச் சொல்வார்கள். அதனைக் கேட்பின்

வெற்றிச் சிறப்பு மிகுந்த கொடியினையும், விரைவு மிக்க காற்றைப்போன்று செல்லும்ஒப்பனை செய்யப்பெற்ற தேரினையும் உடையவர் கோசர்கள். அவர்கள் பகைத்து எழுந்தனர். அதனால் மிகப்பெரிய பழைமையை உடைய ஆலமரத்தின், அரிய கிளைகள் நிறைந்துள்ள ஊர் மன்றங்களிலே, போர் முரசங்கள் குறுந்தடியினால் அடிக்கப்பெற்றனவாக, அவற்றின் முழக்கமும் எங்கணும் எழுந்தன.

அப்படி அந்தக் கோசர்கள் எதிர்த்த போர் முனைகளையெல்லாம் அழித்து வெற்றி சூடிவந்த காலத்திலே, மோகூர்ப் பழையன் என்பவன், அவருக்குப் பணியாது, வன்மையுடன் அவர்களை எதிர்த்து நின்றான்.

அப்போது, அவன்மீது பகைமை மேற்கொண்டு, மிகப்பெரிய சேனையுடன் வந்தவரான புதிய மோரியர்கள், புனையப் பெற்ற தம் தேரின் சக்கரங்கள் உருண்டு செல்லுமாறு, மலையிடங்களை உடைத்துப் பாதையினை அமைத்தனர்.