பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 277



252. அஞ்சான்! ஆற்றான்!

பாடியவர்: நக்கண்ணையார், திண்பொற் கோழிக் காவிதிமகன் கண்ணனார் எனவும், நக்கண்ணன் எனவும் பாடங்கள். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப்புறத் தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.

(இரவுக்குறியிடத்தே, தலைமகளைத் தலைமகன் சந்தித்துக் கூடிவருகின்ற காலம். வழியின் ஏதமும் பிறவும் தலைவியின் உள்ளத்தைப் பெரிதும் வாட்டி வருத்துகின்றன. தன் தோழியிடம், தங்கள் களவு உறவின் நிலைமையை அவள் இவ்வாறு கூறி வருந்துகிறாள்.)

        இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
        வாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
        உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி,
        வெண்கோடு புய்க்கும் தண்கமழ் சோலைப்
        பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தித் 5

        தனியன் வருதல் அவனும்அஞ்சான்,
        பனிவார் கண்ணேன் ஆகிய, நோய்அட,
        எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
        மாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஈங்கைத்
        துய்அவிழ் பனிமலர் உதிர வீசித் 10

        தொழில்மழை பொழிந்த பானாட் கங்குல்
        எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
        பெருங்குளம் காவலன் போல,
        அருங்கடி அன்னையும் துயில்மறந் தனளே!

தோழி! தான் வீழ்த்தும் விலங்கினம் தனக்கு இடப் புறத்தே வீழ்ந்ததென்று ஒருபோதும் நிகழ்ந்ததை அறியாத, வெற்றி பொருந்திய வேட்டைத் திறனையுடையது, ஒளியுடைய கோடுகளையுடையதுமான புலியும் கண்டு நடுங்குமாறு, அது குறித்த யானையின்மீது ஆளியானது விருப்பங்கொண்டு பாய்ந்துவரும்; உயர்ந்த நெற்றியையுடைய யானையின் புள்ளிகளையுடைய முகத்திலே அறைந்து அதனைக்கொன்று, அதன் வெண்கோடுகளையும் புய்த்துத் தள்ளும். அத்தகைய இடமாகிய, தண்ணென்ற மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்ற பெரிய மலைகளின் சாரலினிடத்தே, ஒப்பற்றவேல் ஒன்றினை மட்டுமே ஏந்தியவனாகத் தனியாக வருதலை அவனும் அஞ்சுகின்றான் இலன். நீர் ஒழுகும் கண்ணினளாகிக், காம-