பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 285


அழியவும், தோள்களின் நிறையான வளைகள் சோர்ந்து கழியவுமாக, யானும் அதற்கு ஆற்றாது அதனால் வருந்துவேன். இதனை, இப்படி என்று சொல்வதான தன்மையோடு, அவரிடம் தூதாகச் செல்லும் அன்புடையாரை நாம் பெற்றோமானால்,

நம்மை அழிக்கும் இந்தத் துன்பம் நீங்குமாறு இனனமும் நாட்கள் பலவற்றையும் அவ்விடத்திலேயே கழியாமல், நம் காதலரும் விரைந்து வந்துவிடுவார்; (அங்ஙனம் சென்று உரைப்பாரும் இலரே?)

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதுரத் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. கிளர்தல் - புடைபெயர்தல். உருகெழு அச்சம் நிறைந்த வங்கம் மரக்கலம், அதனுடைய அசைவுஉலகே புடைபெயர்வது போன்ற அச்சத்தைத் தருவதாகும் எனக் கொள்க. 4, வங்கூழ் - காற்று. 6. நீகான் - செலுத்துவோன். 6. மாடவொள் எரி - கலங்கரை விளக்கம். மருங்கு - பக்கம்: செலுத்தும் பக்கமாகிய திசைகள். 7. ஆள்வினை - தொழில் முயற்சி. பகன்றை - சிவதைக் கொடி என்பர். 12. அல்லி அகவிதழ் - அல்லியரிசி எனவும் கூறுவர். 15. அறனின்றலைக்கும் வாடைவருந்துவோரை மேலும் அலைக்கழித்தல் அறமன்று; அதனையே செய்தலால், வாடையை இப்படிக் கூறினார். 19. உரையொடு செல்லும் - துதோடு செல்லும்.

மேற்கோள்: காலத்திற் பிரிவு தலைமகள் ஒழியப் பிரிந்த மைக்கு உதாரணமாக, ‘முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை’ என்னுஞ் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் இதனைக் காட்டினர்.

“தூது விடுவது காரணமாக உரைத்தது’ எனவும், பின் பணி வந்தவாறும், நண்பகல் கூறாமையும் அவர் குறித்த காலம் இதுவென்பது தோன்றியவாறும் காண்க எனவும்,இச் செய்யுளைக் காடி, இருவகைப் பிரிவும் என்னும் சூத்தி உரையிலே நச்சினார்க்கினியர் உரைப்பர்.

“இப்பாட்டுள் வணிகன் தலைவனாகவும் கொள்ளக் கிடத்தலின், தலைவியும் அவ்வருணத் தலைவியாம் என்று உணர்க.” என இதனை, ஏவன் மரபின்’ என்னும் சூத்திர உரையினும் நச்சினார்க்கினியர் காட்டுவர்.

விளக்கம்: இதனால், அந்நாளில் பொருளீட்டும் முயற்சியுடையோர் தரை வாணிகத்துடன் மட்டுமல்லாது, கடல் வாணிகத்தும் ஈடுபட்டிருந்தனர் என்ற உண்மையும்,