பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

அகநானூறு - மணிமிடை பவளம்


        முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்,
        பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்,
        இடுமுறை நிரம்பி, ஆகுவினைக் கலித்துப்,
        பாசிலை அமன்ற பயறுஆ புக்கென,
        வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது, 5

        ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்,
        கலத்தும உண்ணாள், வாலிதும் உடாஅள்,
        சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
        மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
        செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து, அவர் 1O

        இன்உயிர் செகுப்பக் கண்டு, சினம்மாறிய
        அன்னி மிஞ்லி போல, மெய்ம்மலிந்து,
        ஆனா உவகையேம் ஆயினெம்-பூ மலிந்து
        அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின்
        நுண்பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15

        வண்டுபடு நறவின் பவண்மகிழ்ப் பேகன்
        கொண்டல் மாமலை நாறி,
        அம்தீம் கிளவி வந்த மாறே.

பழைமை மேவியிருந்த பசுமையான காட்டிலேயுள்ள, பின்னிப் படர்ந்துகிடக்கும் கொடிகளை எல்லாம் அழித்துப் பகடுகள் பலவற்றைப் பூட்டிய ஏர்களால் உழுதலைப்பெற்ற செந்நிலங்கள், வித்துக்கள் விதைப்பதற்குரிய பக்குவங்கள் முறையே நிரம்ப இடம்பெற்ற வாயின, பொருந்திய வினையின் தகுதியினால் வித்துக்களும் முளைத்துப், பசுமையான இலைகளோடும் அடர்ந்து பயற்றம் பயிராகவும் விளங்கின. அதன்பால் பசு புகுந்து மேய்ந்ததென்று, தன் ஊரிலுள்ள முதிய கோசர்களாகிய ஊர்மன்றத்தார், தன்னுடைய சொற்பிறழாத பண்புடைய தந்தையின் கண்களைக் களைந்து, இரக்கங் காட்டாது கொடுமைசெய்த சிறுமையுடைய செயலினாலே, அன்னி மிஞரிலி என்பாள் ஆராத் துயருற்றாள்.

உண்கலத்திலே உண்பதையும் வெறுத்தாள். தூயனவாக உடுப்பதனையும் கைவிட்டாள். தன் சினத்தாலே கொண்ட நோன்பினின்றும் சிறிதளவும் மாறுபட்டிலள். மறம் கெழுமிய படைவீரரையும் வெற்றிச் சிறப்பையுமுடைய, குறும்பிற்கு உரியவனாகிய, போர் செய்தலிலே நல்ல ஆற்றலுடைய குதிரைப்படைகளையும் கொண்ட திதியன் என்பவனுக்குத், தன்னுடைய நோன்பை அவள் சென்று கூறினாள். அவனும்