பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 17



        ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள்
        தங்கலர் - வழி, தோழி!- செங்கோற்
        கருங்கால் மராஅத்து வாஅல் மெல் இணர்ச்
        சுரிந்துவணர் பித்தை பொலியச் சூடிக்,
        கல்லா மழவர் வில்லிடம் தழீஇ, 15

        வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
        மொழிபெயர் தேளத்தர் ஆயினும்
        பழிதீர் காதலர் சென்ற நாட்டே.

‘இலங்குகின்ற கைவளை நெகிழுமாறு மெலிந்து, தினமும் கலங்கும் துன்பமுழந்து, நாம் இவ்விடத்தே தனித்திருப்பவும், நாட்டிலே,

கடலிடத்தே நாவாயைச் செலுத்திக் கடம்பினை அறுத்து, அதுகொண்டு இயற்றிக்கொண்ட வெற்றிமிக்க முரசினையுடைய சேரலாதன், இமயமலையில் முன்னோரெல்லாம் வியக்க வளைந்த விற்பொறியைப் பொறித்து, (மீண்டும் திரும்பிவந்து), மாந்தைக் கண்ணுள்ள நன்மையினையுடைய தன் கோயிலின் முற்றத்துப் பகைவர் பணிந்து திறையாகத் தந்த பெருமைமிக்க நல்ல ஆபரணங்களோடு, பொன்னாற் செய்த பாவையையும், வயிரங்களையும், ஆம்பல் என்னும் எண்ணின் அளவுக்கு நிறையக் குவித்து, அன்று நிலந் தின்னும்படி அவ்விடத்தே துறந்த, அந்நிதியன்ன நிதியினை நம் காதலர் ஒருநாள் ஒருபகலிற் பெற்றாலும்;

சிவந்த கொம்பினையும் கரிய காம்பினையுமுடைய மரா மரத்தின் வெளிய மெல்லிய பூங்கொத்தினைச் சுரிந்து வளைந்த தலைமயிர் பொலிவுறச் சூடி, ஆறலைக்குந் தொழிலையன்றிப் பிற தொழிலைக் கல்லாத மழவர், வில்லை இடப்புறத்திலே தழுவிச், சுரத்திடையே வருகின்ற சாத்தரைப் பார்க்கும், அச்சம் வருகின்ற கவர்த்த பாலைநில வழிகளையுடைய,மொழி வேறுபட்ட திசையிலுள்ளாராயினும்;

மறுநாள் தங்கார்; தோழி நீ வாழ்க!

என்று, பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தினாள் என்க.

வளை நெகிழ மெலிந்து அஞருழந்து நாம் இவண் ஒழிந்திருக்க, நம் காதலர் சேரலாதன் துறந்த நிதியன்ன நிதியை, ஒருநாள் ஒருபகலிலே தாம் சென்ற நாட்டின்கண் பெறினும், வழிநாள் ஆண்டுத் தங்கலர் என்று கூட்டிப் பொருள் காண்க