பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 305


பெரிதும் கலங்கியவையாக, மிக்க துளிகளையும் பெய்தன. அதனால், அழகுதருகின்ற மழை வெள்ளம், தெரு வெல்லாம் வேகமாக எழுந்து ஓடிக்கொண்டுமிருக்கின்றது. இப்படியாகக் கூதிர்ப்பொழுதும் வந்து நம் ஊரிடத்தே நிலை பெற்றது.

உயர்ந்த நடையினையும், காயும் சினத்தினையுமுடையன போர் யானைகள், இரவிலே, அவை சூழ்ந்து நிற்கப், பகைவர்க்கு அச்சம் பிறக்குமாறு தங்கச் செய்துள்ள தானைப் பெருக்கத்தை உடைய, வெஞ்சினம் உடையவனுமாகிய வேந்தனின் பாசறையிலே உள்ளவர் நம் தலைவர். அவர், நம் நிலைமையை அறிந்து அருளுதற்கு எண்ணாதார் ஆயினும், (இப்படிக் காலந் தாழ்த்தலால் யாம் இறந்துபட, அதனால்) தமக்குப் பின்னர் ஏற்படும் துயரத்தின் நிலைமையினையாவது அறிந்துள்ள னரோ? (அதனையும் அறிந்திலரே? என்பது குறிப்பு)

என்று, பருவம் கண்டு வன்புறை எதிரழிந்து தலைமகள் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. மழை - மேகமும் ஆம். மழையில் வானம் நிர்மலமான தெளிந்த வானம். மீன் - விண் மீன். அணிந்தன்ன அணிந்தாற்போல.3 கோட்ல் - காந்தள். வாங்கு குலை-வளைந்த கொத்து. வான்பூ - பெரிய பூ.5. எல்லுப் பெயல்-பகலிலே பெய்த மழை. 6. ஊர் வயின் - ஊரினிடத்தே 12. ஒங்கு நடை நிமிர்ந்த தடை 14, இறுத்த - பாசறையிடத்தே தங்குமாறு செய்துள்ள.

விளக்கம்: ‘தம் நிலை’ என்பது தமது தகுதியெனவும் பொருள்படும். அப்போது, தாம் கூறிய சூளும் பொய்த்திருக்கும் பொய்ம்மையான தன்மை எனக் கொள்க. என் வருத்தம் அறியாமலிருக்கலாம்; தம் சொல் தவறலாகாது வருதல் வேண்டாம் என்பது கூடவோ அறியாதிருக்கின்றனா? எனப் பொருள் உரைக்க

மேற்கோள்: “இச் செய்யுள் தோழிக்குத் தலைவி கூறியது; இதன்கண் முல்லையுள் கூதிர்வந்தது எனத் திணை மயக்குறுதலும் என்னுஞ் குத்திரத்தும்; இது தலைவன் பாசறைப் புலம்பினமை கூறக்கேட்ட தலைவி, நந்நிலை அறியாராயினும் எனக் கூறினாள் என, நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ என்னும் சூத்திர உரையினும் நச்சினார்க்கினியர் காட்டுவர்.

பாடபேதங்கள்: 3. விரிவெண் கோடல், 6. கண்ணியர் காவயிற்.