பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 307


போன்ற வனப்புடையவளான நீயும் வருந்துகின்றாய். நின் ஒள்ளிய தொடிகளும் நெகிழ்ந்து சரிகின்றன. நின் உடலும் மெலிவுற்ற துயரத்துடனே, ஓயாத கண்ணிரியும் சொரிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு நாம் தனித்து வருந்த, நம்மைக் கைவிட்டுச் சென்றவர் நம் காதலர். அவர்,-

தோளிலே இட்ட வலிமையான வில்லையும், கொடிதான நோக்கத்தினையும் உடையவர்கள், ஆறலை கள்வர்கள், குன்றத்தினை அடைந்து, இனிய முழக்கஞ்செய்யும் எழுச்சி பெற்றுள்ள எருதினைக்கொன்று, உயர்வான நிணம் பொதிந்துள்ள வளமான அதன் தசையினை நெருப்பிலே வைத்துச் சுட்டு எடுத்துக், கண்டவரை வருத்தும் இயல்புடைய பேய்களைப்போல, அவர்கள் வெளுத்த அவ்வூனைத் தின்பார்கள். பின்னர்த் தம்முடைய நீர்வேட்கை தீருமாறு, குற்றமற முதிர்ந்த தோப்பிக்கள்ளையும் குடிப்பார்கள். புலால் நீங்காத கையினராகவும், கழுவாத வாயினராகவும், இடைவிடாது விட்டுவிட்டு ஒலிக்கும் குடுமியினையுடைய கோட்டானின் குரலோடுங்கூடி, வெண்கடப்ப மரங்களையுடைய சிற்றுார்ப் பக்கத்தே, அவர்கள் களிப்புடன் கூத்தாடுவர். சிவந்த நெற்றிகளைக்கொண்ட யானைகளையுடைய, அத்தகைய வேங்கட நெற்றிகளைக் கொண்ட யானைகளையுடைய, அத்தகைய வேங்கட மலையைச் சார்ந்துள்ள, செவ்விய முனை ‘இருப்புக்களை உடைய, கடத்தற்கரிய சுரத்தினையும் கடந்து சென்றுள்ளவர் அவர்.

நம்மைக் காட்டினும் உறுதியுடையதாக, அவர் சென்று ஆராய்ந்து தேடுவதற்கு மேற்கொண்ட பொருள்தான்,

அகன்ற வானிடத்தே உயர்ந்து விளங்குவதாய், புகை போலப் பொலிவுற்றுப் பணி தவழ்வதாய், தீச்சுடரை ஒப்பதாகத் தோன்றும் இமயமாகிய செவ்விய மலையின் உயரிய அளவினைத்தான் ஒப்பாவதோ? அன்றிப்,

பல்வகையான புகழும் நிறைந்தவரும், வெல்லும் போராற்றலை யுடையவருமான நந்தர்களின், சிறப்புமிகுந்த பாடலிபுரத்திலே திரண்டிருந்து, ஒரு காலத்தே கங்கை நீரின் அடியிலே போடப்பட்டு மறைந்துபோன பெருஞ் செல்வத் திற்குத்தான் ஒப்பாகுமோ?

அன்றி, வேறு என்னையோ? (அதனைச் சொல்லுவாயாக)

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதுரத் தோழிக்குச் சொன்னாள் என்க.