பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

அகநானூறு - மணிமிடை பவளம்



        வால்ஏர் எல்வளை நெகிழ்த்த,
        தோளே!-தோழி-தவறுஉடை யவ்வே?

தோழி! நீயும் “நெஞ்சம் நெகிழ்ச்சியுறத் தகுந்தனவற்றைச் சொல்லி, அன்பினாலே நம் உள்ளத்திலே கலந்து, என்றும் பிரியாமையாகிய சூளுறவினையும் செய்தவராகிய நம் காதலர், பொருளிட்டி வருதலாகிய தொழிலினை மேற்கொண்டு, தம்முடைய தன்மையிலே இந்நாளில் வேறுபட்டவராக ஆகுதல் என்னையோ?” என்று, அதனையே ஆராய்ந்து வருந்துதலை விட்டுவிடுவாயாக.

அச்சம்வருகின்ற காட்டிடத்திலே, மேல்காற்றானது கிளையினை உதிர்த்த, பூனைப்பாதத்தைப் போன்ற குவிந்த அரும்புகளையுடைய இருப்பையினது, தந்தத்தைக் கடைந்தது போல விளங்கும் மிகுதியான பூக்களை, மயிரடர்ந்த கால்களையுடைய கரடியின் பெருங்கூட்டம் கவர்ந்து உண்டு கொண்டிருக்கும். மைபட்டிருப்பதுபோல விளங்கும் கருமையான முகத்தையுடைய முசுக்கலையானது, பசுமையற்ற நீண்ட மூங்கிலிலே பாய்தலால், ஒய்யென, மூங்கிலிலே விளைந்துள்ள வெண்மையான நெற்கள், வெப்பம் மிகுந்துள்ள பாறைகளிலே உதிர்ந்து, விரல் நெரிப்பதுபோன்ற ஒலியுடனே பொங்கிப் பொரிந்து கொண்டிருக்கும். அத்தகைய, உயர்ந்த மலைகளையடுத்த சுரநெறிகள் பலவற்றையும் கடந்து சென்ற வரான அவர், ஏதும் பழியுடையவரே அல்லர்.

எந்நாளும், தம்மை விரும்பியவர் யாவர் என்பதை ஆராய்ந்து தெளியமாட்டாதுபோன, விளங்கும் தொழில் திறம் உடைய, வாள்போன்ற அழகிய ஒளிமிகுந்த வளைகளை நெகிழவிட்ட எம் தோள்களே தாம் தவறு உடையன;

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. நெகிழ் தகுந - நெகிழ்தற்குத் தக்கதான. அன்பு கலந்து - அன்புடைமை காட்டிக் கலந்து.3. திறம் - தன்மை. எற்று என்னவோ? 4. இணைதல் - வருத்துதல். 5. கோடை - கோடைக் காற்று; மேல்காற்று. 6. வெருக்கு அடி - வெருக்கின் பாதம். 7. மருப்பு - தந்தம். கொள்ளை - மிகுதி. 8. ஈரினம் - மிகுதியான கூட்டம் 9. முசுக் கலை - முசுவினத்து ஆண்குரங்கு. 10. பைது பக்மை.11. வெதிர் - மூங்கில்.11. பொங்குவன பொரியும் - பொங்குவனவாகப் பொரியும், 12 உகிர் - நகம்:இங்கு விரலைக் குறித்தது. 15. நயந்தோர் - விரும்பினவர்.