பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 323


        ‘முருகு’ என உணர்ந்து, முகமன் கூறி,
        உருவச் செந்தினை நீரொடு தூஉய்,
        நெடுவேள் பரவும், அன்னை; அன்னோ! 15

        என்ஆ வதுகொல் தானே-பொன்னென
        மலர்ந்த வேங்கை அலங்குசினை பொலிய
        மணிநிற மஞ்ஞை அகவும்
        அணிமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே?

பெரிய கையினையுடைய வேழம் ஒன்று, பெரிய புலியுடனே போரிட்டு அதனை வென்றது; புண்பட்ட, புள்ளிகளைக் கொண்ட அதன் நெற்றியினின்றும், புலால் நாற்றம் எழுந்தது. அந்தப் புண்களைக் கழுவுவதற்கு அருவியைத் தந்து உதவுவது தெய்வத்தையுடைய உயரமான மலை.

அத்தகைய மலையினது, அச்சம் வருகின்ற பிளப்புக்களாகிய குகைகளிலே செறிந்திருக்கும் இருளினை, மின்னலின் ஒளிபுகுந்து போக்கிக் கொண்டிருக்கும்.அவ்வாறு இருள்போக்கும் மின்னலைப்போல ஒளியுடன் விளங்கும் வேலானது தான் செல்லும் நெறியினை விளக்கமுறச் செய்யத், தன்னந் தனியனாக வந்தவன், நம் தலைவன்.

அவன், பெய்யும் பனியையும் வெறுக்கமாட்டான். நீர் ஒழுகும் பக்கத்திலேயுள்ள அரிய் இடத்திலே அடர்ந்திருக்கும் காட்டு மல்லிகையின் மலர்களுடனே, கூதாளத்தின் மலர்களையும் ஒருங்கு தொடுத்த கண்ணியைச் சூடியிருப்பான். அந்தக் கண்ணியினின்று எழும் நீங்காத மணத்தினை அசைந்துவரும் காற்று எங்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும். வட்டக்கல் பொருந்திய மிளகுக் கொடிகள் படர்ந்துள்ள தோட்டத்திலேயிருக்கும், குறுகிய இறைப்பினையுடைய நம்முடைய வீட்டினிடத்தே, உள்ளத்தே பெருகிய உவகை உடையவனாக அவன் வந்து புகுவான். அந்த நிலையிலே, நம் அன்னையும் கண்டாள் எனில், முருகனே எனக் கருதி முகமன்கூறி வரவேற்பாள். நல்ல நிறம்வாய்ந்த செந்தினையை நீரோடும் தூவி, அவனை நெடுவேளெனவே நினைந்து பரவவும் தொடங்கிவிடுவாள்.

பொன் என்று சொல்லுமாறு மலர்ந்துள்ள வேங்கையின் அசையும் கிளைகள் பொலிவுறுமாறு, நீலமணியின் நிறத்தினைக் கொண்ட மயிலானது இருந்து. அகவிக் கொண்டிருக்கும் அழகிய மலை நாடனோடு நமக்கு அமைந்த தொடர்பானது, ஐயோ! அப்போது என்னதான் ஆகிவிடுமோ!