பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: 1. விசைத்து - விரைவுடன். 2. வாப்பறை வளைஇ - தாவிப் பறந்து வளையமிட்டு. 4. புனிறு - ஈன்றதன் அணிமை; இங்கே வயல்கள் அறுவடை முடிந்தபின் சிறிது காலத்திற்குள் என்பதைக் குறித்தது. 9. வீங்குபு - மிகுதிப் பட்டதாக. 10. தகைவரல் - தன்மையுடன் வருதலையுடைய 12. திரள்நீடி - திரட்சியுற்று வளர்ந்து.

விளக்கம்: வாடையினால் வருத்தம் அளவுகடந்து போக, ‘தலைவரம்பறியா வாடை' என அதனைப் பழித்தனள். அவனைத் தழுவப் பெறாததனால் எழுந்த காமநோய் நாளுக்கு நாள் வளர்ந்து, தன் தனிமைத்துயர் ஊரும்அறிந்த அலருடையதான நிலையை, முளைத்துப் பெருமரமான தன்மையுடன் உருவகித்தனள்.

பாடபேதங்கள்: 1. விசைத்தெழுந்த, 7. தன்மை அன்மையின். 10. நிலை வரம்பு 1. தோய்வரல் இளமுலை 12. உயவுத்திறன் நீடி. 15. நாரில் பெருமரம்.

274. ஊர் புறவினதுவே!

பாடியவர்: இடைக்காடனார் ; கல்லாடனார் எனவும் பாடம் திணை: முல்லை. துறை: தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

(தன்னுடைய வினைமுடித்த தலைவன், தான் வீடு திரும்புதற்கான காலமும் வந்ததாகத், தன்னுடைய தேர்ப்பாகனுக்குத் தன் வீட்டின் இருப்பிடத்தைத் தெரிவித்துத் தேரினை விரையச் செலுத்தத் தூண்டுகின்றான்)

இருவிசும்பு அதிர முழங்கி, அரநலிந்து,
இகுபெயல் அழிதுளி தலைஇ, வானம்
பருவஞ் செய்த பானாட் கங்குல்,
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,

கடைகோல் சிறுதீ அடைய மாட்டித்,
5

திண்கால் உறியன், பானையன், அதளன்,
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்,
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்,
மடிவிடு வீளை, கடிதுசென்று இசைப்பத்,
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ

10

முள்ளுடைக் குறுந்துாறு இரியப் போகும்
தண்ணறும் புறவி னதுவே-நறுமலர்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே.