பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 335


        மணிமருள் மேனி ஆய்நலம் தொலைய,
        தணிவுஅருந் துயரம் செய்தோன்
        அணிகிளர் நெடுவரை ஆடிய நீரே? 15

கீழ்க்கடலிலே நீரினை முகந்து, அந்தக் கொள்ளையை உடையனவாக வானிலே எழுந்த மேகங்கள், முரசுகெழுமிய வேந்தர்களின் பல்வேறு படைகளையுடைய படைஞர்களும் கேடகங்களை வரிசையாகக் கொண்டிருப்பது போல் விளங்கும்; வலமாக மேலெழுந்து, கோலினிடத்தே தழுவிப் படரும் கொடியனைப் போல வானம் பிளக்கும்படியாக மின்னலிடும்; அச்சந்தரும் இடியினது அதிர்கின்ற முழக்கத்தையும் பொருந்தியிருக்கும்; இந்த நள்ளிரவிலே, அவை பெரிய மலையின் முகட்டிலே சூழ்ந்து கொண்டனவாகவும் விளங்குகின்றன. ஆதலின்,

நாளைப் பொழுதிலே, ஒளிவிளங்கும் அருவியானது பரந்து, பெரிய மூங்கிலின் அழகிய தண்டுகள் ஒடியும்படியாக அவற்றைத் தாக்கி, அழகிய குதிரை மரங்களை எல்லாம் சாய்த்துத் தள்ளிக்கொண்டு, மிக்க பரப்பினையுடைய நம் ஊரின் நீர்த்துறையிலேயே வருவதும் நிகழும் வந்தால்.

செம்மணியைப் போன்ற நம் மேனியின் அழகிய நலமெல்லாம் கெட்டழியும் படியாகத், தணித்தற்கு அரிய துயரத்தை நமக்குச் செய்தவனுடைய, அழகு கிளர்ந்திருக்கும் நெடிய வரையிலே தோய்ந்துவரும்.அந்த நீரிலே, பனி பொருந்திக் குளிர்ந்துள்ள நம் கண்கள் சிவக்கும்ாறு, நள்ளிரவிலே நாம் வெறுத்து அநுபவித்திருக்கும் இத்துன்பமும் நீங்க, நாம் மூழ்கிக் குளிக்கவும் செய்வோமோ?

என்று, இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. குணகடல் - கீழ்கடல் கொள்ளைவானம் - கொள்ளையினைத் தன்பாற் கொண்டிருக்கின்ற மேகம். 4. வசிபட - பிளக்கும்படியாக 6 மீமிசை - உயரமான முகடுகளிலே. 9. ஒசிய ஒடியுமாறு. 13. மணி - செம்மணி.

விளக்கம்: அவன் வராத ஏக்கத்தினாலே துன்புற்றிருக்கும் தன் நிலைமை தோன்ற, அவன் வந்து அதனைத் தீராதவனாயினான்; இனி நாளைக் காலையிலே வரும் புது நீர்ப்பெருக்கிலே மூழ்கி இத்துயரை நாம் தீர்ப்போமோ என்றனள் தோழி. தோல் நிரைத்தன என்பதனை யானைகன்ள வரிசையாக நிறுத்தி வைத்தாற்போல எனவும் உரைப்பர்.