பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

அகநானூறு - மணிமிடை பவளம்



விளக்கம்: கடற்கரைப் பகுதியிலேயுள்ள பரதவர் மகளிர்கள், நண்டினை வெருட்டி அவைகள் அளையினுள் பதுங்கவும் வெளிவரவுமாயிருக்கக் கண்டு விளையாடுதலை வழக்கமாக உடையவர். இந்நாளினும், இப்படி விளையாடு வோரை நாம் கடற்கரைப் பகுதிகளிலே காணலாம். தலைவியும் அத்தகைய விளையாட்டுத் தன்மை மாறாத இளமைப் பருவத்தினள் என்றனன்.

மேற்கோள்: பொருள் எத்துணை அளவுக்குக் கொடுத்தாலும் பெறல் அரியளாயின், தன்னை வழிபட்டால் தந்தை தருவானோ? அது நமக்கு அரிதாகலின், இன்னும் மிகப் பொருள் தேடி வந்து வரைவோம்’ எனத் தலைவன் பொருள் வயிற்கருகியவாறு காண்க என இச்செய்யுளை, வெளிப் படைதானே என்னுஞ் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டிக் கூறுவர்.

பாடபேதங்கள்: 6 ஆயின் அந்தில், 8. உப்புடன் உழுதும். 10. மடுத்தனம் விரும்பில் 14. பரதவன் மகளே.

281. இனிச் செய்வது என்ன?

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: தலைவன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: வடுகரின் துணையோடு தமிழகத்தில் மோரியர் படையெடுத்து வந்த செய்தி.

(தலைமகன் பிரிந்து போயிருந்த காலத்திலே, பிரிவுத் துயரத்தினைப் பொறுக்கலாற்றாது தன்னுடலின் எழிலும் வேறுபட்டவளாயினள் தலைவி. அவளுடைய அத்தகைய வேறு பாட்டினைக் கண்டு மனம் பொறாதவளாயினாள் தோழி. அது கண்ட தலைவி, அந்தத் தோழிக்கு இப்படிச் சொல்லுகின்றாள்.)

        செய்வது தெரிந்திசின்-தோழி!-அல்கலும்,
        அகலுள் ஆண்மை அச்சறக் கூறிய
        சொல்பழுது ஆகும் என்றும் அஞ்சாது.
        ஒல்குஇயல் மடமயில் ஒழித்த பீலி
        வான்போழ் வல்வில் சுற்றி, நோன்சிலை 5

        அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
        கனைகுரல் இசைக்கும் விரைசெல் கடுங்கனை
        முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்
        தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
        விண்ணுற ஓங்கிய பணிஇருங் குன்றத்து, 1O