பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

அகநானூறு - மணிமிடை பவளம்


செல்வார், கற்களிலே மோதி வீழ்ந்து, கிழிந்த உடையினராயும் உலறிய குடையினராயும் ஓடினவர், மரத்தின் மேலேறி இருந்து கொண்டனராகப், பிணந்தின்னும் எருவைச் சேவல் வானிலே வட்டமிட்டுப் பறந்து மேலெழ, அது போகும் திசையை நோக்கியவாறு, பிணம் வீழ்ந்த இடத்தை அறியவும் முயன்றனர் என்று கொள்க. காட்டின் வெம்மையும் கடுமையும் செல்வதற்கு அரிதென்ற போதும், அதனையும் பொருட்டாக்காது அவள் செல்லத் துணிந்தனள் என்க,

286. உண்மை எங்கே?

பாடியவர்: ஓரம்போகியார். திணை: மருதம். துறை: ‘வரைந்து எய்துவல் என்று நீங்கும் தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக்கொண்டு இருத்தல் வேண்டும் என்று, தோழி யைக் கைப்பற்றியது; தன்னைத் தொட்டுச் சூள் உறுவானாகக் கருதித் தோழி சொல்லியதும் ஆம்.

(தலைமகன், வரைவிற்கான பொருள் தேடி வருதலைக் குறித்துத், தலைவியைப் பிரிந்து செல்லுதற்கு நினைவுற்றுத் தோழியுடன் இப்படிச் சொல்லினான். அது கேட்ட அவள், ‘என்றும் பிரியேன்' எனச் சொல்லிய சூளுறையை நினைவூட்டி இப்படிக் கூறுகின்றாள்.)

வெள்ளி விழுத்தொடி மென்கரும்பு உலக்கை,
வள்ளி நுண்இடை வயின்வயின் நுடங்க,
மீன்சினை அன்ன வெண்மணல் குவைஇக்,
காஞ்சி நீழல், தமர்வளம் பாடி,
ஊர்க்குறு மகளிர் குறுவழி, விறந்த 5

வராஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை நாடி, 10

தற்றகவு உடைமை நோக்கி, மற்றதன்
பின்ஆ கும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங் காலை
நூம்மோர் அன்னோர் மாட்டும், இன்ன 15

பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய்யாண்டு உளதோ, இவ்வுலகத் தானே?