பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 347



வெள்ளியினாலே சிறந்த முறையிற் பூண்கட்டிய, மெல்லிய கரும்பினால் இயன்ற உலக்கையினாலே, கொடி போன்ற நுண்மையான இடையானது அப்பயும் இப்படியுமாகப் பக்கங்களிலே அசைந்தாட, மீனின் முட்டைபோன்ற வெண்மையான நுண் மணலைக் குவித்துக், காஞ்சி மரத்தின் நீழலிலே தம் குடியின் பெருமைகளைப் பாடியவாறே, ஊரிலுள்ள இளைய பெண்கள் உலக்கை இட்டு விளையாடுவார்கள். அந்த உலக்கைப் பாடலின் இனிய இசையிலே மெய்ம்மறந்து, மிகுதியான இறால் மீன்களைத் தின்ற சிறிய சிரற் பறவையானது, மருதமரத்தின் தாழ்வான கிளையிலேயிருந்து உறங்கிக் கொண்டிருக்கும் அத்தகைய தண்மையான நீர்த்துறையினை உடைய ஊரனே!

என்றும் விரும்பாத உள்ளமானது ஒரு சமயத்தே ஒன்றை விரும்புமாயினும், தாம் கேட்டறிந்த அறங்களைத் தோட்டியாகக் கொண்டு அந்த ஆசையாகிய மதயானையை அதன் போக்கிலே கட்டுமீறிச்செல்லாது அடக்கிமீட்டு, அறனும் பொருளும் ஆகிய இருவகைப்பட்ட அறங்களினின்றும் வழுவாத ஒரு முறைமையையே ஆராய்ந்து, தன்னுடைய தகுதி உடைமையும் உணர்ந்து, செய்யக் கருதியதைச் செய்த முடித்தலே, செயலிலே சிறப்பு உடையதாகும். பெரியோரின் ஒழுக்கம் அப்படிப் பட்டதாகவே என்றும் இருக்கும்.

அதனால், அரியனவே செய்யும் பெரியவர்கள் என ஆராய்ந்து அறியுங்காலத்திலே, நும்மை ஒத்தவர்களிடத்தும் இத் தன்மையான பொய்யோடுங்கூடிய நடத்தைகள் தோன்று மானால், இவ் உலகத்தினிடத்திலே, உண்மை என்பது எவ்விடத்தே உளதாகுமோ? (அதனை எனக்கு உரைப்பாயாக)

என்று, 'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக்கொண்டு இருத்தல் வேண்டு மென்று தோழியைக் கைப்பற்றியது, தன்னைத் தொட்டுச் சூழ் உறுவானாகக் கருதித் தோழி சொல்லியதும் ஆம்.

சொற்பொருள்: 1. விழுத்தொடி சிறந்த பூண். கருப்பு - கரும்பு 2. வள்ளி - கொடி வயின் வயின் பக்கம் பக்கம்; இரு பக்கமும், 4. தமர் வளம் பாடி - தம் குடியின் வளத்தைப் போற்றிப் பாடி 5. குறுமகளிர் - இளைய பெண்கள் குறுமை பருவம் குறித்தது. விறந்த செறிந்த 9 தோட்டி-அங்குசம், துறட்டி.16. மிடைந்தவை - கலந்தவை.