பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 361



புலமெங்கும் நறுமணம் பரப்பிக்கொண்டிருக்கின்ற மலரினைப்போலக் கரிய பலவாகிய கூந்தலை உடையவள், நல்ல அழகினை உடையவள், குளிர்ச்சியான கண்களை உடையவள், நம்முடைய காதலி மெல்லிய சந்தினையுடைய அவளுடைய பணைத்த தோள்களின் அழகோ, விளக்கம்அமைந்த மாண்பு உடையது ஆகும்.

நன்மையெல்லாம் அற்றுப் போயின, பெரிய மலை உயர்ந்துள்ள பக்கங்களிலே, வளைந்த கோடுகளைக்கொண்ட புலியுடனே சினத்தால் மிகுதிகொண்டு போர் செய்தது, செருக்கு மிகுந்த வலிய களிறு ஒன்று. அதனை வென்ற செருக்குடனே அது சென்று ஒதுங்கியிருக்கும் பக்கங்களிலே,

பெரியவான பரற்கற்கள், சிறிய பலவான மின்மினிப் பூச்சிகளைப் போல எல்லாப் பக்கங்களிலும் நிறைந்துள்ளனவாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் செல்லத்தொலையாத நெடிதான காட்டிடத்தே,

பெரிய சிறகினையுடைய எருவைச் சேவலானது அஞ்சியோடுமாறு, விரிந்த பூங்கொத்துக்களிலே தாதினை ஊதி உண்ணும் வண்டினம் முரல்கின்ற ஒலியைப்போல விரைவுடனே ஒலிசெய்து செல்லுகின்ற அம்பினை உடையவர்கள் ஆறலைப்போர். காண்பார்க்கு அச்சம் வருமாறு தழைக் கண்ணியினைச் சூடிய தலையினராகக் கவர்த்த நெறிகளிலே ஆப்பரித்துக் கொண்டு, வழிச்செல்வாரின் அரிய பொருள்களையெல்லாம் பறித்துக் கொள்பவர் அவர். ஆதலின், வாணிகச் சாத்து எதுவும் செல்லுதலும் அற்றதான அத்தகைய கொடிய நெறியிலே, :

உயர்ந்த உச்சிகளை அடுத்ததாக, சிறிய இலையினையுடைய நெல்லியின் இனிய சுவையுடைய திரண்ட காய்கள் உதிர்ந்து கிடக்கும் காட்டிலே, புள்ளிமானின் அழகிய பிணைகள் தவிர்தல் இன்றி அந் நெல்லிக்காய்களை உண்ணலை நினைந்து, அற்று iழுகின்ற கொம்புகளை ஒழித்த தலையினவும், தோலாற் பொதிய பெற்ற மறு மருப்பு ஆகியனவுமாகிய தம் இளைய கொம்புகள் அதிருமாறு, ஆண் மான்கள் அவற்றைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும். ஞாயிறு காய்தலால் வருத்தமுற்ற அத்தகைய அறிய சுரநெறிகளை எல்லாம் கடந்து வந்தும், நீ இப்போதுஅவளை நினைத்தனையே! (யான் இனி என் செய்வேன்?)

என்று, பொருள்வயிற் போகா நின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.