பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

அகநானூறு - மணிமிடை பவளம்


வருவார் என்னும் குறிப்புத் தோன்ற, நின் தோள் மாணலம் தருகுவர் என்றனள்.

பாடபேதம்: நீடிய வெய்படு.

296. ஊரலரோ பெரிதாயிற்று!

பாடியவர்: மதுரைப் பேராலவாயார். திணை: மருதம். துறை: வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயின் மறுக்கும் தோழி சொல்லியது. சிறப்பு: பெரும் புகழுடையவனும், கொற்கைப் பொருநனுமான, நெடுந்தேர்ச் செழியனைப் பற்றிய செய்தி.

(தலைமகன், வையைப் புதுப்புனலிலே பரத்தையோடுங் கூடிப் புதுப்புனலாடிக் களித்துத் திரிந்தான் எனக் கேட்டு ஊடல் கொண்டனள் தலைவி. அவன், அவளுடைய உறவை விரும்பியவனாக மறுநாள் வீட்டிற்கு வர, அதனை மறுத்து அவள் சொல்லுகின்றாள்.)

         கோதைஇணர, குறுங்கால், காஞ்சிப்
         போது அவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்.
         அரிமதர் மழைக்கண், மாஅ யோளொடு
         நெருநையும் கமழ்பொழில் துஞ்சி,இன்றும்,
         பெருநீர் வையை அவளொடு ஆடிப், 5

         புலரா மார்பினை வந்துநின்று, எம்வயின்
         கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
         பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி
         நார்அரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
         பேர்இசைச் கொற்கைப் பொருநன், வென்வேல் 10

         கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்,
         மலைபுரை நெடுநகர்க் கூடல் நீடிய
         மலிதரு கம்பலை போல,
         அலர்ஆ கின்று, அது பலர்வாய்ப் பட்டே,

தலைவனே! தலைமாலை போன்ற பூங்கொத்துக்களைக் கொண்டிருக்கும் குறிய அடியினையுடைய காஞ்சி மரத்தின் இதழ்விரிந்த நறுமணப் பூந்தாதினைப் பொருந்தியிருக்கும் கூந்தலை உடையவள், செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களை உடையவள்; மாமை நிறத்தினையும் கொண்டவள் ஆகிய பரத்தையுடனே, நேற்று, மணம் கமழுகின்ற பொழிலிலே கிடந்து உறங்கினாய்.