பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 371



இன்றும், அவளுடனே பெருநீர்ப் பெருக்கினையுடைய வையையிலே புதுப்புனலாடி மகிழ்ந்துவிட்டு, அந்த ஈரம் புலராத மார்பினை உடையவனாக எம்மிடத்தே வந்து நின்றனை! நின் செயலை எமக்கு மறைத்தல் நின்னால் இயலுமோ? இயலாதல்லவோ? .

கடற்பரப்பிலே, பலவகையான மீன்களையும் சென்று கொணர்பவர்கள் பரதவர்கள், அவற்றுடன் வாரிக் கொணர்ந்த சிப்பிகளைப், பன்னாடையால் அரிக்கப்பெற்ற களிப்புத்தரும் கள்ளிற்கு விலையாக அவர்கள் சேர்த்து வைப்பார்கள். அத்தகைய, பெரும் புகழினையுடைய கொற்கைத் துறைக்குத் தலைவனாகிய,

வெற்றிச் சிறப்புடைய வேலினையும், பெரிய கடுமையான யானைகளையும், நெடிய தேரினையும் உடைய பாண்டியன் நெடுஞ் செழியனது, மலையைப் போன்ற நீண்ட உயர்ந்த அரண்மனையினையுடைய மதுரையினிடத்தே.

வெற்றிக் களிப்பால் ஆடிய, மிகுதியாக நிறைந்த ஆரவாரத்தைப்போலப், பலர் வாய்ப்பட்டு நின் செயலும் ஊர் அலர் ஆகின்றதே?

என்று, வாயில் வேண்டிச்சென்ற தலைமகற்கு வாயின் மறுக்கும் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. கோதை - தலைமாலை. இணர - பூங்கொத்துக்களை உடைய 2 போதவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்' என்பது, அவள் காஞ்சிமரச் சோலையினூடே ஆடி மகிழ, அங்கு உதிர்ந்த பூந்துகள் அவள் கூந்தலிலே படிந்து அழகு செய்து கொண்டிருந்தன என்று காட்டுதற்காகும். 7 பரப்பில் கடற் பரப்பில், 10 - 11. வென்வேல், கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்’ என, அவன் படைச் சிறப்பைக் கூறுதலால், கூடலில் ஆடிய ஆரவாரம் வெற்றியாரவாரம் எனலாம். இதே ஆரவாரம், அகம் 253இல், நக்கீரனாராலும் கூறப்பட்டது.

பாடபேதம் : 4 துஞ்சினை இன்றும்.

297. தீங்கும் என்ன நிகழுமோ

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: பாலை. துறை: பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.