பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

அகநானூறு - மணிமிடை பவளம்


சொல்லி, அவன் உள்ளத்தை மாற்றி, இருவரையும் சமாதானம் செய்தவர் இவர். தென்னவன் மறவனான கோடைப் பொருநன் புண்ணி, இளங்கண்டீரக்கோ, குமணன், கடிய நெடுவேட்டுவன், மூவன் ஆகியோரைப் பாடியவர். கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர்ஆகியோர் காலத்தவர். இந்நூலின் செய்யுள், காட்டு வழியே தேர் செல்வதனை மிகவும் நயமுடன் வருணிப்பதாகும். ‘திரிமரக் குரல்' என வரும் சொற்கள், மரத் திரிகையினை அன்று பயன் படுத்தியதைக் காட்டுவதாகும்.

இடைக் காடனார் (139, 174,194,284)

இடைக்காடு என்னும் குமரிமாவட்டத்து ஊரினைச் சேர்ந்தவர் இவர் என்பர். தஞ்சை மாவட்டத்துப் பட்டுக் கோட்டைத் தாலுக்கா இடைக்காட்டு ஊரினர் என்பதும் பொருந்தும். நற்றிணையுள்ளும், புறம், குறுந்தொகை, அகநானூறு ஆகியவற்றுள்ளுமாகப் பதினொரு பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன. பெரும்பாலும் இடையர்களைச் சிறப்பித்துப் பாடியவர். இவர் வேறு; இடைக்காட்டுச் சித்தர் என்பார் வேறு. மற்றும் பல நூல்கள் இவரால் இயற்றப்பட்டனவாக வழங்கக் காணலாம். அவை ஊசிமுறி, அறுபது வருட வெண்பா, மூவடி முப்பது ஆகியவை. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவர் இவர். அவனை ஆலத்துர் கிழார். வெள்ளைக்குடி நாகனார் மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், கோவூர் கிழார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், நல்லிறை யனார், எருக்காட்டுர்த் தாயங்கண்ணனார் ஆகியோரும் பாடியுள்ளனர். அதனால் இவர் அவர்கள் காலத்தவர் ஆகலாம். இந்நூற் பாடல்களுள் 139ஆவது பாலைத் திணையையும், பிற முல்லைத் திணையையும் சார்ந்தவை. ஆடு மேய்க்கும் இடையனை இவர் 274ஆவது பாடலுள் உருவகித்திருக்கும் காட்சி மிகவும் நயமுடையதாகும்.

இடையன் நெடுங்கீரனார் (166)

இவருடைய பெயரடை இவர் இடையர் மரபினர் எனவும், கீரனார் என்னும் சொல் சங்கறுப்போர் எனவும் நம்மை மயக்குவதாகும். இடையன் என்பதைக் குலமாகக் கொண்டால் கீரனாரோடு பொருந்தாமையின், இவரையும் இடைக்காட்டு ஊரினராகவே கொள்ளலாம். இவர் பாடியதாகக் காணப்படுவது இந்த ஒரே செய்யுளாகும். இதன்கண், காவிரிப் புதுப்புனலாடும் சிறப்பினையும், மனைவியின் ஊடலை மாற்றுவதற்கு வேளுர் வாயில் தெய்வத்தைக் குறித்து, 'அது என்னை அணங்குக’ எனத் தலைவன் குறையிரந்து வேண்டும்.